ஆர்எஸ்எஸ் வெறுப்புக்கும்.. எங்கள் கருணை கொள்கைக்கும் இடையேயான போட்டி ஜனாதிபதி தேர்தல்: ராகுல் காந்தி
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெறுப்பு கொள்கைக்கும், எதிர்க்கட்சிகளின் கருணை கொள்கைக்கும் இடையிலான போட்டி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணியில் ஆளும் பாஜகவும், காங்கிரஸ், திரிணாமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் முழு மூச்சாக இறங்கின

குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள்
அதன் விளைவாக இன்று காலை முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை
குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக மம்தா பானர்ஜி எதிர்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திமுக, தேசியவாத காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட 13 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் சந்திரசேகர் ராவ் கலந்துகொள்ளவில்லை. இதில் சரத் பவார், பரூக் அப்துல்லா, கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு மூவரும் இதற்கு சம்மதிக்காததால் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார்.

வேட்புமனுத் தாக்கல்
இந்த நிலையில் இன்று யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் தேசிய செயலாளர் சீதாராம் எச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, திமுக எம்.பி. ஆ.ராசா, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் கே.டி.ராமா ராவ் உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர்.

ராகுல் காந்தி பேச்சு
வேட்புமனுத் தாக்கலுக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கின்றன. நாங்கள் தனி நபரை ஆதரிக்கிறோம். ஆனால், உண்மையான போட்டி 2 கொள்கைகளுக்கும் இடையிலானது. ஒரு கொள்கை வெறுப்பு மற்றும் கோபத்தை கொண்ட ஆர்.எஸ்.எஸ். உடையது. மற்றொரு கொள்கை கருணை போதிக்கிறது. அதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம்." என்றார்.












Click it and Unblock the Notifications