சைலண்டா.. உக்ரைனை ஓரம்கட்டி இந்தியாவில் தடம் பதித்த ரஷ்யா.. சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் டாப்!
டெல்லி: உக்ரைனை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் மிகப்பெரிய சூரியகாந்தி எண்ணெய் சப்ளையராக மாறி உள்ளது ரஷ்யா. 2021 ஆம் ஆண்டில் 1.75 லட்சம் டன்னாக இருந்த ரஷ்ய சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி, 2024 ஆம் ஆண்டில் 20.9 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. அதாவது ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி நான்கு ஆண்டுகளில் 12 மடங்கு உயர்ந்துள்ளது.
உலக அளவில் சமையல் எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயில் 60% ஆகவும், சோயாபீன் 25% ஆகவும், சன்பிளவர் ஆயில் 12% ஆகவும் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை அதிக அளவு சமையல் எண்ணெய் நுகரும் நாடாக உள்ளது. இந்தியர் ஒருவருக்கு ஒரு ஆண்டுக்கு சராசரி சமையல் எண்ணெய் தேவை 19 கிலோ.

சூரியகாந்தி எண்ணெய் இந்தியாவில் அதிகம் நுகரப்படும் மூன்று முன்னணி சமையல் எண்ணெய்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் உள்நாட்டு உற்பத்தி நாட்டின் மொத்த தேவையில் 5% ஐ மட்டுமே பூர்த்தி செய்கிறது. இதனால் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளது இந்தியா.
உலக அளவில் சூரிய காந்தி எண்ணெய் உற்பத்தியில் உக்ரைன் பங்கு 50 சதவீதம். சூரிய காந்தி எண்ணெய் வர்த்தகத்தில் ரஷ்யாவின் பங்கு 25 சதவீதமாக உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக சூரிய காந்தி எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு, விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சூரியகாந்தி எண்ணெய்க்கான இந்தியாவின் முன்னணி சப்ளையராக மாறியுள்ளது ரஷ்யா. நீண்டகாலமாக, இந்தியாவுக்கு அதிகம் சன் ஃபிளவர் ஆயில் சப்ளை செய்யும் நாடாக இருந்த உக்ரைனை பின்னுக்குத் தள்ளி இந்தப் பெருமையை ரஷ்யா அமைதியாகக் கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கான சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி கடந்த நான்கு ஆண்டுகளில் பன்னிரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்தியா 2024 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இருந்து சுமார் 2.09 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. 2021 இல் இது 175,000 டன்னாக இருந்தது. முன்பு இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு10% ஆக இருந்தது. இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து சன் ஃப்ளவர் இறக்குமதி 56% ஆக உயர்ந்துள்ளது.
2025 முதல் பாதி நிலவரப்படி, சூரியகாந்தி எண்ணெய் 6.8 லட்சம் டன்னாக உள்ளது. ஐரோப்பிய தேவையை பூர்த்தி செய்ய உக்ரைன் அதன் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் பெரும்பகுதியை திருப்பிவிட்டாலும், இந்திய சந்தையில் அதன் பிடியை வலுப்படுத்த ரஷ்யா துறைமுகங்களில் தடையற்ற அணுகலைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications