இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின்
டெல்லி: ஈரான் போரால் அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தான் நம் நாட்டுக்கு சலுகை விலையில் வழங்கிய கச்சா எண்ணெயின் விலையை உயர்த்த அதிபர் விளாடிமிர் புதின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இதனால் ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழிப்பாதையை மூடியுள்ளது. இந்த பாதை வழியாக தான் கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகளிடம் இருந்து இந்தியா, சீனா உள்பட ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய், எல்என்ஜி கியாஸ் சப்ளை செய்யப்படும்.

தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் அரபு நாடுகளின் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பெரியளவில் பாதிக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி உலகளவில் கச்சா எண்ணெய்க்கான டிமாண்ட் அதிகரித்து உள்ளதோடு, விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கையிருப்பு எவ்வளவு?
தற்போது நம் நாட்டிடம் 25 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 25 நாட்களுக்கு போதுமான பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளது. ஆனால் போர் தொடரும் பட்சத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம். இதனால் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு வரை நம் நாட்டின் கச்சா எண்ணெயில் 38 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்து வந்தது. இதனால் டிரம்ப் 25 சதவீதம் வரை அபராத வரி விதித்தார். அதன்பிறகு வரியை ரத்து செய்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நம் நாடு குறைத்து கொண்டது
ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி
இப்போது ஈரான் போரால் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை போக்க மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு திட்டமிட்டுள்ளது. இதற்கு அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஈரான் போரால் உலகளவில் கச்சா எண்ணெய்க்கு ஏற்படும் தட்டுப்பாட்டை போக்க ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. நம் நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் ரஷ்யா நம் நாட்டுக்கு இடியை இறக்கி உள்ளது. அதாவது கடந்த 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. இதையடுத்து அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன.
விலையை உயர்த்த ரஷ்யா முடிவு
இதனால் வேறு வழியின்றி ரஷ்யா தனது பொருளாதார தேவைக்காக நம் நாட்டுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெயை வழங்கி வந்தது. இது நம் நாட்டுக்கு பெரிய அளவில் லாபம் கொடுத்தது. ஆனால் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் சப்ளை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய்க்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதனால் நம் நாட்டுக்கு வழங்கும் சலுகை விலை கச்சா எண்ணெயின் விலையை உயர்த்த ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரஷ்யா தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
காரணம் இதுதான்
2026 ஜனவரியில் ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு 1.98 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. அதன்பிறகு தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்தது. கடந்த வாரம் ஒரு நாளைக்கு 1.04 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கொள்முதல் செய்தது. இப்படி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து வரும் நிலையில் அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நம் நாடு அதிகரித்துள்ளது.
2025 ஏப்ரல் 2026 ஜனவரி வரை இந்தியா, அமெரிக்காவில் இருந்து 11.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை விட 32 சதவீதம் அதிகமாகும். இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் அமெரிக்காவின் பங்கு 2025 ஏப்ரல் முதல் 2026 ஜனவரி வரை 8 சதவீதமாக அதகிரித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 5.7 சதவீதமாக மட்டுமே இருந்தது.
இப்படி ரஷ்யாவை கைவிட்டு அமெரிக்காவிடம் அதிகமான கச்சா எண்ணெயை இந்தியா வங்கி வரும் நிலையில் தான் இந்த முறை நம் நாட்டுக்கு கச்சா எண்ணெயை சலுகை விலையில் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய புதின் முடிவு செய்துள்ளார். இது நம் நாட்டுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications