ஞானவாபி மசூதியில் “சிவலிங்கமா?” வயதை அறியும் உத்தரவை எதிர்த்து மனு - ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்
டெல்லி: ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் போன்ற வடிவில் இருக்கும் நீர்வீழ்ச்சியின் வயதை அறிய வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று இருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அருகே வரலாற்று சிறப்புமிக்க கியான்வாபி மசூதி அமைந்து இருக்கிறது. இதனை முகலாய பேரரசரான ஷாஜகானின் மகனான பேரரசர் அவுரங்கசீப் கட்டினார். கோயிலும் மசூதியும் அருகருகே அமைந்து இருக்கும் இப்பகுதி மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழ்ந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை..

காரணம் கடந்த சில ஆண்டுகளாக இந்துத்துவ அமைப்புகள் இந்த ஞானவாபி மசூதி நிலத்துக்கு உரிமைகோரி வருகின்றன. மசூதி வளாகத்தின் சுவர் அருகே உள்ள சிங்கார கவுரி அம்மன் சிலைக்கு ஆண்டுக்கு 5 முறை பூஜை நடத்த அனுமதி கேட்டு 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஆண்டு இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
இதற்கு எதிராக மசூதியை நிர்வகித்து வரும் அஞ்சுமன் ஜாமியா கமிட்டி சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2022 மே 17 ஆம் தேதிக்குள் வீடியோ ஆய்வை நிறைவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, வழக்கு குறித்த ஆவணங்களை பார்க்காமல் கள ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது என அவர் கூறினார். இதனை தொடர்ந்து, மசூதியில் கள ஆய்வு நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த ஆய்வின் முடிவில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் போன்ற உருவம் இருப்பதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

அதை தொடர்ந்து சிவலிங்கம் போன்ற வடிவம் இருக்கும் இடத்துக்கு சீல் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதே நேரம் அது சிவலிங்கம் இல்லை என்றும், மசூதியில் தொழுகைக்கு வருபவர்கள் தூய்மை செய்யும் தொட்டியில் அமைக்கப்பட்ட நீர்வீழ்ச்சி போன்ற அமைப்பு என மசூதி நிர்வாகம் தெரிவித்தது. இதேபோல் ஏராளமான மசூதிகளில் உள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும் மசூதியில் தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்ததை எதிர்த்தும் தனி வழக்கு தொடரப்பட்டது. அதேபோல் அலகாபாத் உயர்நீதிமன்றம் மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் போன்ற வடிவத்தின் வயதை கார்பன் டேட்டிங் மூலம் கண்டறியுமாறு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது அது விசாரணைக்காக ஏற்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டிஎய் சந்திரசூட் அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் இந்து அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் கேபியட் மனு தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications