கோடநாடு கேஸ்- மறு விசாரணைக்கு தடை கோரிய அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!
டெல்லி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மறுவிசாரணைக்கு தடை கோரிய அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதனால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற காவலாளியை கொலை செய்து, ஆவணங்கள்- பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தக் கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சயான், வாளையார் மனோஜ் ஆகிய இருவரும் 2019-ல் திடீரென பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலால்தான் நடைபெற்றதாக கூற பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டவட்டமாக இதனை மறுத்தது.

கோடநாடு வழக்கில் மறுவிசாரணை
இதனையடுத்து கிடப்பில் கிடந்த கோடநாடு வழக்கு அண்மையில் தூசு தட்டப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் 17-ந் தேதி குற்றம் சாட்டப்பட்ட சயானிடம் நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத், டி.எஸ்.பி சுரேஷ் ஆகியோர் முதலில் விசாரணை நடத்தினர். பின்னர் கோடநாடு வழக்கில் தொடர்புடைய மர்மமான முறையில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சசிகலா, எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தனர். அதில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாக கூறப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கோடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும்; எனவே புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை விசாரிப்பது தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய கடந்த 3-ந் தேதி உத்தரவிட்டது. தற்போது உதகை நீதிமன்றத்தில் இந்த வழக்கின் மறுவிசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

எடப்பாடி புகார்
நீலகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மறுவிசாரணையே தம்மை வழக்கில் சேர்க்க நடக்கும் சதி என பகிரங்கமாக குற்றம்சாட்டினார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடமும் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மனு கொடுத்தனர். சட்டசபையிலும் இந்த பிரச்சனையை எழுப்பி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். மேலும் கோடநாடு வழக்கை மறுவிசாரணை செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தியது அதிமுக.

ஹைகோர்ட்டில் தடை கோரி வழக்கு
இதனிடையே கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியாக இருக்கும் அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மறுவிசாரணைக்கு தடை கோரி மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மறுவிசாரணை நடத்த போலீசாருக்கு அதிகாரம் உண்டு என அதிரடியாக தீர்ப்பளித்தது. மேலும் சாட்சியாக உள்ள ஒருவர் மேல்விசாரணைக்கு தடை கோருவது ஏன்? எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
இதனை எதிர்த்து அனுபவ் ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இதை இன்று விசாரித்த நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் அனுபவ் ரவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அப்போது, மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவில் எந்த ஒரு முகாந்திரமுமே இல்லை. கோடநாடு வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. இந்த வழக்கில் இப்போதைய நிலையில் தலையிட முடியாது எனவும் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமடைய உள்ளது. மேலும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு.












Click it and Unblock the Notifications