ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனுவை விசாரிக்க இருந்த நிலையில் கைது செய்ய என்ன அவசரம்?- உச்சநீதிமன்றம்
டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரிக்க இருந்த நிலையில் அவசரமாக அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அரசு பணிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ3.10 கோடி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் கூறப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி தலைமறைவு
இந்த புகார்களின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது.

கர்நாடகாவில் கைது- சிறையில் அடைப்பு
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திலும் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதனிடையே கர்நாடகாவில் பதுங்கி இருந்த ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் போலீசார் கைது செய்தனர். ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்த அதிமுக, பாஜக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். ஶ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திர பாலாஜியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார்.

உச்சநீதிமன்றம் கேள்வி
இதனிடையே ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் நிலையில் அவரை ஏன் அவசரம் அவசரமாக கைது செய்தீர்கள்? ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர்களை எல்லாம் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
Recommended Video

தமிழக அரசுக்கு நோட்டீஸ்
இதற்கு தமிழக அரசு தரப்பில், ராஜேந்திர பாலாஜி மீது அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதியவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு இவ்வழக்கு விசாரணை வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications