ராஜீவ் கொலை வழக்கு: 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!
டெல்லி: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதால பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரித்துவருகிறது என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ விசாரித்து வருவது எங்களுக்கு தெரியும். அது பற்றி பின்னர் முடிவெடுக்கலாம். இப்போது பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்குவது என நாங்கள் தீர்மானமாக உள்ளோம் என கூறி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
Recommended Video
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. இது தொடர்பாக அதிமுக ஆட்சியில் தமிழக அமைச்சரவை ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த தீர்மானத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தரக் கோரி தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் 7 தமிழரையும் விடுதலை செய்ய மத்திய அரசு மறுத்து வருகிறது.

பரோல் கொடுத்த தமிழக அரசு
இந்நிலையில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு அடுத்தடுத்து பரோல் விடுப்பு வழங்கி உள்ளது. பேரறிவாளனுக்கு ஒவ்வொரு மாதமும் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டும் வருகிறது. கடந்த 10 மாதங்களாக பேரறிவாளன் பரோல் விடுப்பில் உள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தம்மை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

ஆளுநர் தரப்புவாதம் நிராகரிப்பு
இந்த விசாரணையின் போது, 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்தனர உச்சநீதிமன்ற நீதிபதிகள். மேலும் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சர்வதேச பின்னணி குறித்த பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் விசாரணைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பேரறிவாளன் மனுவுக்கும் ஆளுநர் தரப்பின் கருத்துக்கும் தொடர்பு இல்லை எனவும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

ஜாமீன் மனு மீது விசாரணை
இதையடுத்து இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க காலதாமதம் ஆகும்; தற்போது பரோல் விடுப்பில் இருக்கும் பேரறிவாளன், யாரையும் சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறார். பேரறிவாளன் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டது போல் இருக்கிறார். ஆகையால் அவருக்கு இந்த வழக்கு முழுமையாக முடியும் வரை ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரும் பேரறிவாளன் மனு மீதான விசாரணை நடைபெற்றது.

மத்திய அரசு எதிர்ப்பு
இன்று பிற்பகல் விசாரணை தொடங்கியது முதலே மத்திய அரசு பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் கைதிகளின் தண்டனை குறைப்பு தொடர்பாக மாநில அரசு முடிவெடுக்க முடியாது; ஜனாதிபதிதான் முடிவெடுக்க முடியும் என்றது. அத்துடன் சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது; அதனால் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதிடப்பட்டது.

ஜாமீன் கொடுத்த நீதிபதிகள்
ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, மத்திய அரசின் கருத்தை ஏற்காமல் நிராகரித்தனர். கைதிகளின் தண்டனை குறைப்பு தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்கிற போது ஜனாதிபதிக்கு மட்டும் எப்படி வரும்? என்றனர். மேலும் கைதிகளை விடுதலை செய்வது என்பது தமிழக அரசின் முடிவு. அதன் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டா? இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பது எங்களுக்கும் தெரியும். அதுபற்றி பின்னர் விவாதிக்கலாம். ஏற்கனவே 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளன் தற்போது உடல்நலக் குறைவால் பரோலில் இருக்கிறார். அவரது உடல்நலக் குறைவை காரணம் காட்டி ஜாமீன் வழங்குகிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications