"சல்யூட்.." ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற சேவாக்!
டெல்லி: ஒடிசாவில் ரயில் விபத்தில் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே அந்த குழந்தைகளின் கல்வி செலவைத் தான் ஏற்பதாக முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சேவாக் அறிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசா மாநிலத்தில் மோசமான ரயில் விபத்து நடந்தது. இந்த விபத்தில் இதுவரை 270க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் பலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். சிலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் இருந்து கிளம்பிய கோரமண்டல் ரயில் பாலசோர் மாவட்டத்தில் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.. இருப்பினும், கோரமண்டல் ரயில் முதலில் சரக்கு ரயிலில் மோதி தடம் புரண்டதாகச் சொல்லப்படுகிறது. தடம் புரண்ட பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அங்கே வந்த யஸ்வந்த்பூர்-ஹவுரா ரயிலும் அதில் மோதியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்தாக இதற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் இதில் பல குழந்தைகளின் பெற்றோரும் பலியாகியுள்ள நிலையில், குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சேவாக் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் ஏற்கனவே இந்த ரயில் விபத்திற்கு இரங்கல் தெரிவித்திருந்தார். இந்த விபத்து வருத்தமளிப்பதாகவும் அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு அனுதாபங்களையும் அவர் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் இந்த ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக சேவாக் அறிவித்துள்ளார்.
ஒடிசா ரயில் விபத்து குறித்த படத்தை ட்விட்டரில் பகிர்ந்த சேவாக், "இந்த படம் நிச்சயம் நமது மனதில் இருந்து அவ்வளவு சீக்கிரம் நீங்காது.. இந்த துயரமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வியைக் கவனித்துக் கொள்வதுதான் என்னால் செய்யக்கூடியது. சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியில் இந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறேன்.
மேலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் மருத்துவ குழுவினருக்கும் ரத்த தானம் செய்ய முன்வந்தவர்களுக்கும் எனது சல்யூட். நாம் இதில் ஒன்றாக இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். மாணவர்களின் பள்ளிக் கல்வி செலவை ஏற்கனவே அதானி நிறுவனமும் ஏற்கும் என்று கவுதம் அதானியும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நெட்டிசன்கள் பலரும் இருவரையும் இதற்காக பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications