அடுத்தடுத்த சம்பவங்கள்.. பயங்கரவாதிகள் எல்லாமே ஒரே இடத்தில்! பாஜகவை சரமாரியாக சீண்டிய காங்கிரஸ்!
டெல்லி: இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்களுடன் பாஜக நெருக்கமான உறவில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அண்மைக் காலமாக இந்தியாவில் முக்கிய விவகாரங்களில் கைது செய்யப்படுவோர் பாஜகவுடன் தொடர்பில் இருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

உதாரணமாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ரியாஸி மாவட்டம், துக்சான் கிராம மக்களால் லஷ்கர் தீவிரவாதியான தலிப் உசேன் ஷாவும் அவரது கூட்டாளியும் சிறைபிடிக்கப்பட்டனர். அதில் தலிப் உசேன் ஷா பாஜக நிர்வாகி என விசாரணையில் அம்பலமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட டெய்லர் கன்னையா லாலை கழுத்து அறுத்து கொலை செய்த ரியாஸ் அட்டாரி, பாஜக தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக பாஜகவின் தேசியவாத பேச்சுகள் வெற்று நாடகம் என்று 23 மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் அந்தந்த மாநிலங்களில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, பயங்கரவாதம் போன்ற தேசிய பிரச்னைகளில் அரசியல் செய்வதில் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை.
ஆனால் பயங்கரவாத நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும் பாஜகவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது வெளியில் வரத் தொடங்கியுள்ளன. தேசியம் பற்றி இந்திய மக்களுக்கு வகுப்பெடுக்கும் பாஜக கட்சியிடம், கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் உள்ளன.
அதில் அசாம் மாநிலத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகியாக உள்ள நிரஞ்சன் ஹோஜாய் அரசு பணத்தை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்திய வழக்கில் 2017ம் ஆண்டு என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பயங்கரவாத எதிர்ப்புப் படை தரப்பில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்ததாக கூறி பாஜக தொழிற்நுட்ப அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே ஜம்மு - காஷ்மீரின் பாஜக முன்னாள் நிர்வாகியான அகமது மிர், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications