தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்!
சென்னை: தமிழகத்தில் மூன்று பவர் சென்டர்கள் இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் கூறியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசியலில் தற்போது பேசுபொருளாகியிருப்பது நடிகர் விஜய்யின் டெல்லி பயணம் மற்றும் பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்த எதிர்பார்ப்புகள் தான்.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷாம் அளித்துள்ள நேர்காணலில், விஜய்யின் அரசியல் அணுகுமுறைக்கும் பிரதமர் மோடியின் பாணிக்கும் இடையே உள்ள வியக்கத்தக்க ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஊடகங்களைச் சந்திப்பதைத் தவிர்ப்பதில் விஜய் 'தமிழக மோடி'யாகவே செயல்படுகிறார் என்ற விமர்சனத்தை அவர் முன்வைத்துள்ளார். விஜய் தனது டெல்லி பயணத்திற்குத் தனி விமானத்தைப் பயன்படுத்தியது குறித்துப் பேசிய ஷியாம், இது மக்கள் மற்றும் ஊடகங்களிடமிருந்து விலகி இருக்க அவர் எடுக்கும் முயற்சியாகவே தெரிகிறது என்றார்.
பொது விமானத்தில் பயணித்தால் சக பயணிகள் மற்றும் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்பதால், அதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மோடியும் இதேபோலத்தான் ஊடகங்களைச் சந்திப்பதில்லை என்பதை அவர் இங்கே ஒப்பிட்டுக் காட்டினார். விஜய்யின் தனிப்பட்ட சுபாவம் குறித்துப் பேசிய அவர், 1998-ல் தான் விஜய்யைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அப்போதே அவர் யாரிடமும் அதிகம் பேசாத, ஒரு 'இன்ட்ரோவர்ட்' (Introvert) ஆகத்தான் இருந்தார்.
படப்பிடிப்புத் தளங்களில் மற்ற நடிகர்களைப் போல அரட்டை அடிக்காமல், தனது வேலை முடிந்ததும் கேரவனுக்குள் சென்றுவிடும் பழக்கம் கொண்டவர் விஜய். இந்தத் தனிமை விரும்பும் குணம், ஒரு முதலமைச்சராக நிர்வாகம் செய்யும்போது அதிகாரிகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்று ஷியாம் எச்சரிக்கிறார்.
தற்போது தமிழகத்தில் நிலவும் நிர்வாகத் தேக்க நிலை குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். முதலமைச்சர் என்ன நினைக்கிறார் என்பது அதிகாரிகளுக்கே புரியாத சூழல் நிலவுவதாகவும், இதனால் பல முக்கியப் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், தமிழகத்தில் தற்போது மூன்று 'பவர் சென்டர்கள்' இயங்குவதாக ஆங்கில ஊடகங்கள் விமர்சிப்பதையும், இது நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். பவர் சென்டரெல்லாம் இருக்க கூடாது, ஒரே ஒரு பவர் சென்டர் அது நான்தான் என விஜய் தனது பதவியேற்பு விழாவில் எச்சரிக்கை விடுத்திருந்தார். குறிப்பாக, அனுபவக் குறைவினால் எடுக்கப்படும் சில முடிவுகள் அரசுக்குத் தேவையற்ற நெருக்கடியை உருவாக்குகின்றன.
அதிமுகவிலிருந்து விலகி விஜய்யின் பக்கம் சாய்ந்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சித் தாவல் தடைச் சட்டம் குறித்தும் விரிவான விளக்கங்களை ஷியாம் அளித்தார். 1985-ல் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம், தற்போது பல குழப்பங்களுக்கு உள்ளாகியிருப்பதை அவர் விளக்கினார்.
ஒரு கட்சியின் தாய் அமைப்பின் முடிவுக்குச் சட்டசபை உறுப்பினர்கள் கட்டுப்பட்டவர்கள் என்றும், அதை மீறும்போது தகுதி நீக்க நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
விஜய்யின் அரசியல் பயணம் இந்தச் சட்டச் சிக்கல்களை எப்படிக் கையாளப் போகிறது என்பதுதான் தற்போதைய கேள்வி. 2029-ல் வரவிருக்கும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தினால் 2028-லேயே தேர்தல் வர வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார்.
இத்தகைய சூழலில், விஜய் தனது 'தூய சக்தி' என்ற பிம்பத்தைத் தக்கவைத்துக் கொள்வது கடினம் என்றும், நிர்வாக ரீதியான தவறுகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பது அவரது அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும் தராசு ஷியாம் தனது நேர்காணலில் ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications