எளிமையானவர்.. யுனிசெப் பாராட்டிய எம்பி.. புது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.. மன்சுக் மண்டாவியா யார்
டெல்லி: புதிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக மன்சுக் மண்டாவியா அறிவிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தன் பதவி விலகிய நிலையில் மன்சுக் மண்டாவியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு மிக மோசமாக இருந்தது. உலக நாடுகள் பல விமர்சனம் செய்யும் அளவிற்கு நிலைமை கைமீறி சென்றது. இந்திய நிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தனை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ளனர். புதிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக மன்சுக் மண்டாவியா அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர்
மன்சுக் லக்ஷ்மன்பாய் மண்டாவியா தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், இவர் ஏற்கனவே உர மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக உள்ளார். அதேபோல் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறையின் இணை அமைச்சராக இருக்கிறார். குஜராத்தில் இருந்து இவர் ராஜ்யசபாவிற்கு தேர்வாகி அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எளிமை
மிகவும் எளிமையான எம்பி, மக்களோடு நெருக்கமானவர் என்று இவர் பெயர் பெற்றவர். பல்வேறு விழிப்புணர்வு பாத யாத்திரைகளை இவர் மேற்கொண்டு இருக்கிறார். பல்வேறு கிராமங்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவர் பாட்ச் யாத்திரைகளை மேற்கொண்டு இருக்கிறார். அதேபோல் பெண்களின் சுகாதாரம், மாதவிடாய் விழிப்புணர்வு குறித்த பாத யாத்திரைகளை இவர் மேற்கொண்டு இருக்கிறார்.

யார் இவர்?
அமைச்சர் மன்சுக் மண்டாவியாவின் இந்த பாத யாத்திரைகளை ஐநாவின் யுனிசெப் (UNICEF) அமைப்பு இவரை பாராட்டி உள்ளது. இளம் வயதில் இருந்து வலது சாரி கொள்கையில் ஆர்வம் உடையவர் இவர். கல்லூரி பருவத்தில் இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியில் தீவிர உறுப்பினராக இருந்தார். குஜராத்தில் பல்வேறு பொறுப்புகளில் இவர் வகித்தார்.

பின்னணி
பின் பாஜகவில் இணைந்தவர், குஜராத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து இருக்கிறார்.
2002-2007: குஜராத் சட்ட மன்ற உறுப்பினர்.
2012-2018: ராஜ்ய சபா எம்பி
2013: குஜராத்தில் பாஜகவின் இளமையான மாநில செயலாளர்
2015: பொது செயலாளர் பாஜக, குஜராத்
2016-2019: உர மற்றும் ரசாயனத்துறை அமைச்சர். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறையின் இணை அமைச்சராக இருக்கிறார்
2018:மீண்டும் ராஜ்ய சபாவிற்கு தேர்வு என்று பல்வேறு பொறுப்புகளை இவர் வகுத்து உள்ளார்.

கொரோனா
இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இவரின் நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவில் மூன்றாம் அலை பாதிப்பு விரைவில் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா நியமனம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் கொரோனா தடுப்பு நடவடிக்கை எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications