ஸ்மிரிதி இரானி டூ ராஜீவ் சந்திர சேகர் வரை.. தோல்வியை சந்தித்த மத்திய அமைச்சர்கள் யார் யார்? லிஸ்ட்
டெல்லி: நாட்டின் 18வது லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எனினும் இந்த லோக்சபா தேர்தலில் மத்திய அமைச்சர்கள் பலர் போட்டியிட்டு தோல்வியை சந்திதுள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.
நாட்டின் 18வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு கடந்த 1 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

எனினும் பாஜக மட்டும் 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் பாஜக கூட்டணி கட்சிகளை நம்பியே இந்த முறை ஆட்சி செய்ய இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறி வந்த பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவு சற்று அதிர்ச்சியை கொடுத்தது. முன்னதாக பாஜக இந்த தேர்தலில் பல அமைச்சர்களை களம் இறக்கியது. இதில், ஸ்மிரிதி ராணி உள்பட பலர் தோல்வியடைந்துள்ளனர். இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மத்திய அமைச்சர்கள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.
ஸ்மிரிதி ராணி:
அமேதி லோக்சபா தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தியை வீழ்த்தி இந்தியா முழுக்க கவனம் பெற்றார் ஸ்மிரிதி இராணி. மத்திய அமைச்சர் பொறுப்பை வகித்த ஸ்மிரிதி இராணி இந்த முறையும் அமேதி தொகுதியில் போட்டியிட்டார். எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஸ்மிரிதி இராணிக்கு காங்கிரசின் கிஷோரி லால் சர்மா அதிர்ச்சி கொடுத்துள்ளார். 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிரிதி ராணி தோல்வியடைந்துள்ளார்.
அஜய் மிஸ்ரா டெனி:
மத்திய உள்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வரும் அஜய் மிஸ்ராவின் மகன் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லகிம்பூர் கேரி வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் அஜய் மிஸ்ராவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி வேட்பாளரிடம் இவர் தோல்வி அடைந்தார்.
அர்ஜுன் முண்டா:
ஜார்க்கண்டின் கண்டி லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் கலிசரன் முண்டாவிடம் 1.28 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ராஜீவ் சந்திர சேகர்:
கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை எதிர்த்து போட்டியிட்டவர் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்வநுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜீவ் சந்திர சேகர், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து சில சுற்றுக்கள் முன்னிலை பெற்றார். ஆனால் அடுத்தடுத்த சுற்றுக்களில் பின்னடைவை சந்தித்தார். இறுதியில் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார்.
ஆர்கே சிங்:
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சராக இருக்கும் ஆர்கே சிங்க் தோல்வியை தழுவியுள்ளார். கமயூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுடமா பிரசாத்திடம் 59,808 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். பீகாரின் ஆரா தொகுதியில் போட்டியிட்ட ஆர் கேசிங்க் தோல்வி அடைந்துள்ளார் .












Click it and Unblock the Notifications