ரூ.12 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தாலும் ஜாக்பாட்.. வருமான வரி குறித்து விளக்கிய நிர்மலா சீதாராமன்
டெல்லி: நேற்றைய பட்ஜெட்டில் புதிய வருமான வரி முறையில் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டிவோருக்கு வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மிடில் கிளாஸ் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில் ரூ.12 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் ஈட்டினாலும் குறைந்த அளவில் தான் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி புதிய வருமான வரி திட்டத்தில் ரூ.12 லட்சம் வரை சம்பளம் அல்லது வருவாய் ஈட்டுவோர் இனி வரி கட்ட தேவையில்லை. அதோடு ரூ.75 ஆயிரம் வரை நிலையான கழிவும் கிடைக்கும். இதனால் ரூ.12.75 லட்சம் வரை வரி கட்ட தேவையில்லை.

மேலும் புதிய வரி அடுக்குகள் புகுத்தப்பட்டுள்ளன. அதன்படி மேற்கூறியதை விட அதிகம் சம்பாதிப்போருக்கு வரி என்பது விதிக்கப்படும். அதன்படி ரூ. 4 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வருவாய் ஈட்டுவோருக்கு 5 சதவீதம், ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் ஈட்டுவோருக்கு 10 சதவீதம், ரூ. 12 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் ஈட்டுவோருக்கு 15 சதவீதம், ரூ. 16 லட்சம் முதல் ரூ. 20 லட்சத்துக்கு 20 சதவீதம் மற்றும் ரூ. 24 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வருமான வரி கணக்கிடப்படும்.
இதன்மூலம் ஒட்டுமொத்த பட்ஜெட்டிலும் அதிக கவனம் ஈர்த்தது இந்த புதிய வருமான வரி முறையில் ரூ.12 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு தான். இதுதான் டாக் ஆஃப் தி டவுன் ஆக உள்ளது. இந்நிலையில் தான் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. இதுதொடர்பாக தூர்தர்ஷனுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியின் விபரம் வருமாறு:
கேள்வி: ரூ.7 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற நிலையை இப்போது ரூ.12 லட்சமாக அறிவித்து உள்ளதன் பின்னணியில் ஏதாவது முக்கிய காரணம் இருக்கிறதா? இப்போது வருமானம், சம்பளம் உள்ளிட்டவை எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. இதனால் தள்ளுபடி அறிவித்து மத்திய அரசு புரோமோட் செய்கிறதா? அதோடு இந்த அறிவிப்பால் 1 டிரில்லியன் வருவாய் இழப்பை எப்படி சரிசெய்ய போகிறீர்கள்? இது பட்ஜெட் கணக்கீட்டில் இடிக்காதா? இதற்கான நிதியை எங்கிருந்து கொண்டு வரப்போகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது.
நிர்மலா சீதாராமன் பதில்: வரி பற்றிய விவாதம் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு முன்பு வருமானம் என்பது குறிப்பிட்ட அளவுக்கு வளர்ச்சி பெற் வேண்டும்.இப்போது வருமான வரி வரம்பை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.23 லட்சமாக ஏன் அதிகரிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்கள்? இதற்கு முன்பு வருமான வரி வரம்பு ரூ.2.2 லட்சமாக இருந்தது. 2014ல் ரூ.2.5 லட்சமாகவும், 2019ல் ரூ.5 லட்சமாகவும், பிறகு ரூ.7 லட்சமாகவும், இப்போது ரூ.12 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு ஒருவர் சராசரியாக மாதம் ரூ.1 லட்சம் சம்பாதித்தால் அவர்கள் வரி செலுத்த வேண்டாம் என்று அரசு நினைத்து அதனை நிறைவேற்றி உள்ளது.
அதேபோல் வரி ஸ்லாப்புகள் குறைக்கப்பட்டு வருகிறது. சீரான காலக்கட்டத்தில் வரிகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இது அனைத்து ஸ்லாப்புகளிலும் வரி செலுத்துவோருக்கும் பயனாக அமைவதோடு, அவர்களுக்கு நிவாரணம் வழங்குகிறது. மேலும் தற்போதைய அறிவிப்பின்படி பல்வேறு ஸ்லாப்புகளில் வரி செலுத்துவோருக்கு கூடுதல் சலுகைகளை கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். இதன்மூலம் பொதுமக்களிடம் இருக்கும் பணம் என்பது சேமிப்பு அல்லது முதலீடு என்ற வகையில் நம் நாட்டு பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் கடந்த 2014ம் ஆண்டு முந்தைய காங்கிரஸ் அரசு செயல்படுத்திய வருமான வரி முறை அமலில் இருந்தது. அந்த வரி விகிதங்களுடன் இப்போதைய வரி விகிதத்தை ஒப்பிட்டு பாருங்கள்.. கடந்த 2014ல் ரூ. 8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ரூ.1 லட்சம் வரி செலுத்த வேண்டியிருந்தது. ரூ.12 லட்சம் சம்பாதிப்போர் ரூ.2 லட்சம் வரி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போது ரூ.8 லட்சம், ரூ.12 லட்சம் சம்பாதித்தால் அவர்கள் வரி செலுத்த தேவையில்லை. மாறாக வரி கட்ட வேண்டிய பணம் அவர்களின் கைகளில் தான் இருக்கும்.
அதோடு இப்போது அனைவருக்கும் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 2014ல் ரூ.24 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் ரூ.5.6 லட்சம் வரி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போது ரூ.3 லட்சம் செலுத்தினால் போதும். மாறாக அவர்களின் கைகளில் ரூ.2.6 லட்சம் என்பது இருக்கும். இதனால் இந்த முறையில் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் மட்டும் பயனடைவதில்லை. அதைவிட தாண்டி வருமானம் ஈட்டுவோரும் பயணடைய உள்ளனர்'' என்றார்.












Click it and Unblock the Notifications