இந்திய தேர்தல் அரசியலில் பேஸ்புக் தலையீடு! பரபரப்பு குற்றச்சாட்டை லோக்சபாவில் எழுப்பிய சோனியா காந்தி
டெல்லி: ‛‛இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஜனநாயகத்தை முடக்கும் செயலுக்கு பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று நடாளுமன்றத்தில் பேசினார்.
இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. இன்று லோக்சபாவில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசினார்.
அப்போது அவர் சமூக வலைதளங்களான டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட உலகளாவிய நிறுவனங்கள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். லோக்சபா பூஜ்ஜிய நேரத்தில் சோனியா காந்தி பேசியதாவது:

ஜனநாயகத்தை முடக்குகிறது
இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளில் ஜனநாயகத்தை முடக்கும் செயலுக்கு சமூக வலைதளங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. உலகளாவிய நிறுவனங்களான பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அரசியல் தலைவர்கள், கட்சிகள் சார்ந்தவர்களின் அரசியலை வடிவமைக்க அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜனநாயகம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பிற்கு உதவாத இந்த செயலுக்கு ஆளும் அமைப்புகளுக்கு சமூக வலைதள நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.

உணர்ச்சி தூண்டலில் லாபம்
இந்த சமூக வலைதளங்கள் அனைத்து கட்சியினருக்கும் சமமான பயன்பாட்டை வழங்குவது இல்லை. மேலும் சமூக நல்லிணக்கத்தை பேஸ்புக் சீர்குலைக்கிறது என்பது பலமுறை பொது கவனத்துக்கு வந்துள்ளது. தவறான தகவல்கள் மூலம் உணர்ச்சி ரீதியாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தூண்டப்படுகின்றனர். இதை வைத்து பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன.

முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
மேலும் பெரிய சமூக ஊடக நிறுவனங்களுக்கும், ஆளும் தரப்புக்கும் இடையேயான உறவு வளர்ந்து வருவதையும் அறிக்கைகள் சுட்டிகாட்டுகின்றன. ஜனநாயக முறையிலான அரசியல் தேர்தல்களில் இந்த சமூக வலைதள நிறுவனங்கள் தலையீடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கட்சி மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு யாராக இருந்தாலும் ஜனநாயகத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க இதை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸின் நிலைப்பாடு
தொடக்கம் முதலே சமூக வலைதள நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. சமூக வலைதளங்கள் மூலம் போலி தகவல்கள் பரப்புவதால் பிரச்சனைகள் எழுவதாகவும் குற்றம்சாட்டியது. மேலும் சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரப்புவதை கட்டுப்படுத்த இந்தியாவில் தனிச்சட்டம் வேண்டும் எனவும் காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் லோக்சபாவில் சோனியா காந்தி சமூக வலைதளங்கள் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications