பிகே மீட்டிங்.. காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவில் முக்கிய மாற்றம்.. சோனியா காந்தி நடவடிக்கை!
டெல்லி: நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழுவில் மாற்றம் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்து இருக்கிறது. 2024 லோக்சபா தேர்தலுக்காகவும், அடுத்த வருடம் நடக்க உள்ள உ.பி தேர்தல் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்காகவும் அக்கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது.

அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் உதவியுடன் கட்சியில் முக்கிய மாற்றங்களை செய்யவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக பிகேவுடன் காங்கிரசின் சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதில் காங்கிரசை புதுப்பிக்க பிகே பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதில், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழுக்களை மாற்றி அமைக்க வேண்டும். பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் காங். உறுப்பினர்கள் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும்.
ஜி 23 உறுப்பினர்கள் எனப்படும் கட்சியில் மாற்றம் செய்ய கோரி கடிதம் எழுதிய சசி தரூர், மணீஷ் திவாரி உள்ளிட்ட 23 தலைவர்களுக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்க வேண்டும் என்று பிகே அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில்தான் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கட்சியின் பாராளுமன்ற குழுவில் மாற்றம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காங்கிரஸ் தலைவராக நான் பாராளுமன்றத்தின் இரண்டு அவையின் குழுவிலும் மாற்றம் செய்துள்ளேன். மழைக்கால கூட்டத்தொடர் முழுக்க இவர்கள் சந்தித்து ஆலோசனை செய்வார்கள். பாராளுமன்ற அலுவல் குறித்தும், லோக்சபா, ராஜ்ய சபா விவாதங்கள் குறித்தும் இவர்கள் ஆலோசனை செய்வார்கள்.
அவையில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து இவர்கள் பேசுவார்கள், என்று சோனியா காந்தி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அதன்படி மக்களவைத் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தொடர்வார். இவரின் பதவி பறிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, துணைத் தலைவராக கவுரவ் கோகய் நியமிக்கப்பட்டுள்ளார். லோக்சபாவில் தலைமைக் கொறடாவாக கே.சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். லோக்சபாவில் கூடுதல் கொறடாக்களாக ரவ்னீத் சிங் , மாணிக்கம் தாகூர் ஆகியோர் செயல்படுவார்கள்.
ஜி 23 தலைவர்களான மணிஷ் திவாரி, சசி தரூர் ஆகியோரும் இந்த கொறடா குழுவில் இடம்பிடித்து உள்ளனர். காங்கிரஸ் தலைமைக்கு தேர்தல் வேண்டும், வலுவான தலைமை வேண்டும் என்று கடந்த வருடம் கடிதம் எழுதிய 23 தலைவர்களில் இவர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜ்யசபாவின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே நீடிப்பார். அதேபோல் துணைத் தலைவராக ஆனந்த் சர்மா நீடிப்பார். ராஜ்ய சபாவின் தலைமைக் கொறடாவாக ஜெய்ராம் ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். லோக்சபா கொறாடா குழுவில் தமிழ்நாடு காங். எம்பி ப.சிதம்பரம் மற்றும், அம்பிகா சோனி, திக்விஜய் சிங், கே.சி.வேணுகோபால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications