மத்திய அரசுக்கு தலைவலி! நெருக்கடி கொடுக்கும் நிதிஷ், சந்திரபாபு.. பட்ஜெட்டில் வைக்கும் டிமாண்ட்
டெல்லி: பாஜக கூட்டணி அரசின் முதல் 'பட்ஜெட்' வருகிற 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் தங்கள் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் மத்திய அரசை வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. தனித்து ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் பாஜகவிற்கு கிடைக்கவில்லை என்பதால் மத்தியில் முதல் முறையாக பிரதமர் மோடி கூட்டணி ஆட்சியை அமைத்து இருக்கிறார்.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தெலுங்கு தேசம் 16 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும் வென்றுள்ளது. கூட்டணி ஆட்சி அமைத்துள்ள மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதற்கிடயே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வருகிற 22 ஆம் தேதி தொடங்குகிறது.
ஆகஸ்டு 12 ஆம் தேதி வரை இத்த கூட்டத் தொடர் நடக்கிறது. 22 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடப்பு நிதியாண்டுக்கான (2024 - 2025) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்காலத்தின் முதலாவது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கடந்த சில நாட்களாக நிர்மலா சீதாராமன் பல்வேறு துறையினரையும் அழைத்து ஆலோசனை நடத்தினார். எனவே, பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்று எதிர்பார்ப்புடன் பார்க்கப்படுகிறது. தொழில்துறையினரும் வரிச்சலுகைகளை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளார்கள்.
இதற்கிடையே பட்ஜெட்டில் தங்கள் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று பாஜகவின் கூட்டணி கட்சிகளான நிதிஷ்குமாரும்,தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் கோருவதாக சொல்லப்படுகிறது. அதாவது 2025-ஆம் நிதி ஆண்டில் கூடுதலாக ரூ 48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என இரு மாநிலங்களும் கோரிக்கை வைப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுபோக மூலதன செலவுகளுக்காக 1 லட்சம் கோடி வட்டியில்லா நீண்ட கால கடனும் வழங்க வேண்டும் என இரு மாநிலங்களும் கோருவதாக சொல்லப்படுகிறது. இது மத்தியில் ஆளும் பாஜகவிற்கு சற்று நெருக்கடியை கொடுக்கும் விதமாக உள்ளது. இரு மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கினால் பிற மாநிலங்களும் எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் பாஜக அரசு எப்படி கையாளும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications