பாஜகவுக்கு எதிராக ‘சண்டை’ செய்ய ஒன்று திரண்ட தென் மாநில தலைகள்.. எதிர் அட்டாக்கை தொடங்கிய மோடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆளும் கட்சிகள், மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர் போராட்டக் கணைகளைத் தொடுத்துள்ளன. இதற்கு, பிரதமர் மோடி எதிர்வினை ஆற்றியுள்ளார்.

மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா காங்கிரஸ் எம்.பி சுரேஷ், தென்னிந்திய மாநிலங்கள் இணைந்து தனிநாடு கோரும் நிலைமை உருவாகும் என எச்சரித்திருந்தார்.

South india ruling parties protest against BJP Government: PM Modis reaction

கர்நாடகா போராட்டம்: இதைத்தொடர்ந்து நேற்று புதன்கிழமை அன்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட வரி பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய பாஜக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். கர்நாடகாவின் தலைநகரான பெங்களூர், நாட்டிலேயே இரண்டாவது அதிக வரி செலுத்தும் நிலையில், கர்நாடகா புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகிறது காங்கிரஸ்.

கடந்த நான்கு ஆண்டுகளில், கர்நாடகா மத்திய அரசிடமிருந்து திரும்பப் பெறப்பட்ட வரி நிதியின் பங்கு 4.71% இல் இருந்து 3.64% ஆகக் குறைந்துள்ளது என்று சித்தராமையா கூறினார். தென் மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சியை சிறப்பாகச் சமாளித்த நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் நிதி விநியோகிக்கப்படுவது என்பது தவறானது என்று கர்நாடக முதல்வர் கூறினார்.

"வட இந்திய மாநிலங்கள் மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்கவில்லை, தென்னிந்திய மாநிலங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தின. மக்கள்தொகை கட்டுப்பாடு நமக்கு சாபமாகிவிட்டது. நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இது அநீதி இல்லையா?" என கர்நாடக முதல்வர் சித்தராமையா காட்டமாக கேள்வி எழுப்பினார்.

கேரளா போராட்டம்: மத்திய அரசு வரி பகிர்வு, நிதி பகிர்வில் கேரள மாநிலத்தை புறக்கணிப்பதாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன், தனது அமைச்சரவை சகாக்களுடன் இன்று டெல்லியில் போராட்டம் நடத்துகிறார்.

இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான் முழுமையாக ஆதரிக்கிறோம் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் திமுக எம்பிக்கள் கறுப்பு உடையுடன் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு எம்.பிக்கள் போராட்டம்: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே கறுப்பு உடை அணிந்து திமுக எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ்நாட்டு மக்கள் இளித்தவாயர்களா? பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?

தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க எம்.பி.,கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணிப்பதைக் கண்டித்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று திமுக எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்குவது தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே கடந்த செவ்வாய்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தமிழக ஆளும் கட்சியான திமுக இன்று டெல்லியில் பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது.

மோடியின் எதிர்வினை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததோடு, நிதி ஆயோக் பரிந்துரைகளால் மத்திய அரசின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று கூறினார். பிரதமர் மோடி, பாஜக அரசுக்கு போராட்டம் நடத்திய முதல்வர்கள் மீது எதிர் தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ராஜ்யசபாவில் பதிலளித்துப் பேசிய மோடி, " நாட்டை வடக்கு, தெற்கு என காங்கிரஸ் பிரிக்கப் பார்க்கிறது. அரசியல் ஆதாயங்களுக்காக தேசத்தை உடைக்க இதுபோன்ற புதிய கட்டுக் கதைகளை உருவாக்குவதை நிறுத்துங்கள். இது நாட்டின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது" என்று பிரதமர் மோடி பேசினார்.

இதெல்லாம் சரி இல்லை: எங்கள் வரி எங்கள் பணம் எனப் பேசும் விதம் சரியா? உடலில் ஒரு பாகம் வேலை செய்யாவிட்டாலும் மொத்த உடலும் ஊனம் தான். நாட்டின் எந்தப் பகுதி வளர்ச்சியில் தடைபட்டாலும், இந்தியா வளர்ந்த தேசமாக உருவெடுக்க முடியாது. அரசியல் ஆதாயங்களுக்காக பிளவுபடுத்திப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனப் பேசினார் பிரதமர் மோடி.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக, குறிப்பாக, நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாக தென் மாநிலங்கள், பாஜக அரசுக்கு எதிராக திரண்டுள்ள நிலையில், பிரிவிவை பேசுவதாக பிரதமர் மோடி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம், தென் மாநிலங்கள் vs மத்திய பாஜக அரசு என்ற இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+