மக்களுக்கு கொடுத்தா இலவசம், கார்ப்பரேட்டுக்கு ஊக்கத்தொகையா? நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் கேள்வி
டெல்லி: பாஜக ஆட்சியில் கார்ப்ரேட்டுகளின் வரி 11 சதவிகிதம் குறைக்கப்பட்டிருப்பதாகவும், மக்களுக்கு கொடுத்தால் இலவசம், கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்தால் ஊக்கத்தொகையா? என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதத்தில், தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள பேரிடருக்கான நிதியை வழங்கவில்லை என திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. இது குறிது நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன், நிர்மலா சீதாராமனுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் அவையில் பேசியதாவது, "பணவீக்கத்தைப் பற்றி இங்கே பேசி உள்ளீர்கள். நிறைய வரைபடங்கள் வெள்ளை அறிக்கையிலே இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு வரைபடத்தை நீங்கள் ஏன் தவறவிட்டீர்கள்? சமையல் கியாஸ் விலை உயர்வு வரைபடத்தை நீங்கள் வெளியிடத் தயாரா?
10 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான வரிகள் 3.5 மடங்கு உயர்ந்திருக்கிறது, டீசல் மீதான வரி 9.5 மடங்கு உயர்ந்திருக்கிறது. இதற்கு யார் காரணம்? யமுனையின் கரையிலே சாந்தி வனத்திலே உறங்கிக் கொண்டிருக்கிற ஜவஹர்லால் நேரு தான் இதற்கும் காரணமா?
நீங்கள் யோசித்துப் பாருங்கள், கார்ப்பரேட்டுகளின் வரி 2016 ஆவது ஆண்டு 33 சதவீதம் இருந்தது. உங்கள் ஆட்சியில் கார்ப்பரேட்டுகளின் வரி 22% மட்டுமே. அதாவது 11% அளவுக்கு கார்ப்பரேட்டுகளுக்கு வரியை குறைத்து இருக்கிறீர்கள். 1% கார்ப்பரேட் வரி என்பது ரூ.50,000 கோடி ஆகும். அப்படியெனில் 11% வரி என்றால் எத்தனை ஆயிரம் கோடி என்று நிதி அமைச்சர் இந்த அவையிலே கணக்கு முன் வைப்பாரா?
மக்களுக்குக் கொடுத்தால் அது சலுகை, மக்களுக்கு கொடுத்தால் அது இலவசம். கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்தால் அது ஊக்கத்தொகை. உங்களது அகராதியை இந்த நாடு மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது. உங்களது வெள்ளை அறிக்கை ஏழைகளின் கண்ணீராலும், கார்ப்பரேட்டுகளின் புன்னகையாலும் நிரம்பி வழிவதை இந்த நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications