சீனாவின் மேப்பை பாருங்க.. இந்தியாவுக்கே துரோகம் செய்கிறார் பிரதமர் மோடி.. பரபரவென விளாசிய சு.சாமி
டெல்லி: நடந்து முடிந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது சீனாவின் வரைபடமானது இந்தியாவின் லடாக், அருணாச்சல் பிரதேச பகுதிகளுடன் இருந்ததாகவும், இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி சென்று இந்தியாவின் தேச நலனுக்கு துரோகம் செய்ததாகவும் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. சீனா தொடர்ந்து அத்துமீறி இந்திய நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பு செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசு உரிய முறையில் சீனாவுக்கு பதிலடி கொடுப்பதாக கூறி வருகிறது.
இந்தியா-சீன எல்லையில் அவ்வப்போது பதற்ற நிலை ஏற்படுவதால் இருநாட்டு ராணுவங்களும் எல்லையில் எப்போதும் உஷராகவே உள்ளன. குறிப்பாக சீனா அருணாச்சல் பிரதேசம், லடாக் பகுதிகள் மீது கண்வைத்து சீனாவுடன் இணைக்க செயல்பட்டு வருகிறது.

இந்தியா - சீனா எல்லை மோதல்
கடந்த 2020 மே 5ல் இந்தியா- சீனா இடையே பாங்காங் ஏரி பகுதியில் பிரச்சனை ஏற்பட்டு ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டன. அதேபோல் 2020 ஜூன் மாதம் 15ல் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். மொத்தம் 42 சீன வீரர்கள் இறந்ததாக தகவல்கள் வெளியாகின. இத்தகைய எல்லை மோதலால் இருநாடுகள் இடையேயான உறவு என்பது பாதிக்கப்பட்டு வருகிறது.

ஷாங்காய் உச்சிமாநாடு
இந்நிலையில் இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2001ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு பிராந்தியம் மற்றும் சர்வதேச பிரச்சனைகள், பாதுகாப்பு குறித்து விவாதிக்கும் அமைப்பாக உள்ளது. அதோடு நாடுகள் இடையேயான வர்த்தகம், பரஸ்பர உறவு, பொருளாதாரம் சார் நடவடிக்கைகளை மேம்படுத்த இந்த அமைப்பு பயன்படுகிறது.

பிரதமர் மோடிபங்கேற்பு
அதன்படி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22வது உச்சிமாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் சமீபத்தில் நடைபெற்றது. பிரதமர் நரேந்தி மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜிங்பின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் நாடுகள் இடையேயான பிராந்தியம் தொடர்பான பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டின் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் எல்லை மோதலால் சீன அதிபர் ஜி ஜிங்பின்னிடம் அவர் பேசவில்லை

இந்திய பகுதிகளுடன் சீன வரைபடம்
இதற்கிடையே தான் தற்போது பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் சீனா சார்பில் வழங்கப்பட்ட அந்நாட்டின் வரைபடத்தில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், லடாக் பகுதிகள் இருந்ததாக சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

துரோகம் செய்யும் பிரதமர் மோடி
இதுதொடர்பாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛லடாக் மற்றும் அருணாச்சல் பிரதேசத்தை சீனாவின் ஒருபகுதியாக காட்டும் வகையில் சீன மொழியில் அந்த பகுதிகளை குறிப்பிட்டு எஸ்சிஓ மாநாட்டில் சீனா வழங்கி உள்ளது. பிரதமர் மோடி இந்த கூட்டத்துக்கு சென்று இந்தியாவின் தேசநலனுக்கு துரோகம் செய்தார். இது இந்தியாவுக்கான இறுதி உதையாக உள்ளது'' என கூறியுள்ளார்.

ஒன்றும் நடக்காதது போல்...
மேலும் இன்னொரு ட்விட்டர் பதிவில், ‛‛1995ம் ஆண்டு பரஸ்பரம் ஒபபுக்கொண்ட எல்லை கட்டுப்பாட்டு கோடுகளை கடந்து டெப்சாங், கல்வான், கைலாஷ் மலைகளின் பெரும் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து இன்னும் வழி மேல் விழிவைத்து பார்த்து கொண்டிருக்கிறது. ஆனால் மோடி இன்னும் ஒன்றும் நடக்காதது போன்ற மனநிலையிலேயே உள்ளார்'' என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications