ராஜ்யசபா MPஆகும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி மனைவி சுதா மூர்த்தி-யுகே பிரதமருக்கு உள்ள தொடர்பு தெரியுமா
டெல்லி: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ரஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். யார் அவர்.. எதற்காக அவர் ராஜ்யசபா எம்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து பார்க்கலாம்.
நமது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸை ஆரம்பித்தவர்களில் ஒருவர் நாராயண மூர்த்தி.. இந்தியா ஐடி துறையில் சர்வதேச அளவில் வேற லெவலுக்கு செல்ல இன்ஃபோசிஸ் முக்கிய காரணம்.

நாராயண மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவரும் அவரது மனைவி சுதா மூர்த்தியும் தொடர்ச்சியாகச் செய்திகளில் இடம்பிடித்த வருவார்கள். குறிப்பாக அவர்களின் எளிமை அனைவரையும் வியக்க வைக்கும்.
டிரெண்டிங்: கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி எகானமி கிளாஸில் பயணித்து இருந்தார். அதை அவரது சக பணி இணையத்தில் பகிர்ந்திருந்தார். அதேபோல நாராயண மூர்த்தி, சுதா மூர்த்தி மற்றும் அவரது மகள், பேரக்குழந்தைகள் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் வெகு சாதாரணமாகப் பெங்களூரில் உள்ள ஒரு சாலையோர கடையில் புத்தகங்களை வாங்குவதும் இணையத்தில் டிரெண்டானது. இப்படி பலருக்கும் எடுத்துக்காட்டாகவே இவர்கள் உள்ளனர்.
இதற்கிடையே ராஜ்யசபா உறுப்பினராகச் சுதா மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ரஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜ்யசபா எம்பியாகும் சுதா மூர்த்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோடி வாழ்த்து: இது குறித்து அவர் கூறுகையில், "இந்திய குடியரசுத் தலைவர் சுதா மூர்த்தியை ராஜ்யசபாவிற்கு பரிந்துரைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சமூகப் பணி, தொண்டு மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா ஜியின் பங்களிப்பு மகத்தானது. ராஜ்யசபாவில் அவரது இருப்பு பெண்களின் வலிமையை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது. நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் ஆற்றலை இது எடுத்துக்காட்டுகிறது. அவரது நாடாளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியை மணந்த சுதா மூர்த்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பல நாவல்கள், தொழில்நுட்ப புத்தகங்கள் மற்றும் பயணக் கதைகளை எழுதியுள்ளார். அவர் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை மணந்த அக்ஷதா மூர்த்தியின் தாய் ஆவார். சுதா மூர்த்தி இப்போது இந்தியாவில் இல்லை. அவர் வெளிநாட்டில் இருக்கிறார்.
பிரதமருக்கு நன்றி: இதற்கிடையே தன்னை ராஜ்யசபா எம்பியாக நியமித்ததற்குப் பிரதமர் மோடிக்குச் சுதா மூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார், தனக்குக் கிடைத்த பெரிய மகளிர் தின பரிசு என்றும் நாட்டிற்காக பணியாற்றுவதில் புதிய பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யார் இவர்: சுதா மூர்த்தி 1950 ஆகஸ்ட் 19ஆம் தேதி கர்நாடகாவின் ஷிகானில் பிறந்தவர்.. கணினி பொறியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சுதா மூர்த்தி, டாடா இன்ஜினியரிங் மற்றும் லோகோமோட்டிவ் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் பொறியாளர் ஆனார்.
சுதா மூர்த்தியும் அவரது கணவர் நாராயண மூர்த்தியும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்குத் தொடர்ச்சியாக நன்கொடை அளித்து வருகிறார்கள். பத்ம பூஷன் விருது பெற்ற சுதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார், வறுமை, சுகாதாரம் எனப் பல துறைகளை மேம்படுத்த அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர். இன்போசிஸ் அறக்கட்டளை மூலம், வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளைக் கட்டியுள்ளார், பள்ளிகளில் நூலகங்களை நிறுவியுள்ளார், பொது கழிப்பறைகள் கட்ட நிதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications