‘ஜாக்குலினுக்கு காதலர் தின வாழ்த்துகள்’.. சுகேஷ் சொன்ன மெசேஜ்! கோர்ட்டுக்கு வெளியே குசும்பை பாருங்க!
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சுகேஷ் சந்திரசேகர் காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி : தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி நீதிமன்றத்திற்கு வெளியே காதலர் தின வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.
மோசடி வழக்குகளில் கைதான சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்கள் வழங்கியது விசாரணையில் தெரியவந்ததால் ஜாக்குலின் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ள நடிகை ஜாக்குலின், அண்மையில், நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் தனது உணர்ச்சிகளுடன் விளையாடிவிட்டதாக வாக்குமூலம் அளித்திருந்தார்.

மோசடி மன்னன் சுகேஷ்
இரட்டை இலை சின்னத்தை மீட்க டிடிவி தினகரனுக்கு இடைத்தரகராக செயல்பட்டு, டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு பகீர் மோசடி புகார்களில் சிக்கியவர் சுகேஷ் சந்திரசேகர். மேலும், சுகேஷ் மீது 20க்கும் அதிகமான மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சிறையில் இருந்தபடியே, பிரபல தொழிலதிபரின் மனைவியிடம், அவரது கணவரை ஜாமீனில் வெளியே எடுக்க உதவுவதாகக் கூறி ரூ.200 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்டார். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி சிறையில் இருக்கிறார் சுகேஷ் சந்திரசேகர்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
சுகேஷ் சந்திரசேகருக்கும், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பல நடிகைகள், மாடல்களுடன் தொடர்பில் இருந்துள்ளார் சுகேஷ். நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகேஷ் சந்திரசேகருடன் மிகவும் நெருக்கமாக இருந்த நிலையில், ஜாக்குலினும் மோசடி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். பாலிவுட் நடிகை நோரா பதேகி, அருஷா பட்டில், சோபியா சிங் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் சாட்சிகளாக உள்ளனர்.

ஜாக்குலின் வாக்குமூலம்
சுகேஷ் சந்திரசேகர் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்கள் மற்றும் பணம் வழங்கியது விசாரணையில் தெரியவந்ததால் ஜாக்குலின் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. நீதிமன்றத்தில் நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் ஜாமீன் பெற்றுள்ளார். சமீபத்தில், போலீசில் ஜாக்குலின் அளித்த வாக்குமூலத்தில், "சுகேஷ் என் உணர்ச்சிகளுடன் விளையாடி, என் வாழ்க்கையை நரகமாக்கி, என் தொழிலையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டார்" என்று ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.

தினமும் வீடியோ கால்
"சுகேஷ் சந்திரசேகர் உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு என்னை நம்ப வைத்தார். தினமும் மூன்று முறை போன் மற்றும் வீடியோ காலில் பேசிக் கொள்வோம். அவர் சிறையில் இருந்து பேசுவதாக என்னிடம் ஒருமுறை கூட காட்டிக்கொண்டதில்லை. ஒரு கட்டத்தில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருப்பதையும் என்னை அவர் ஏமாற்றியதையும் தெரிந்து கொண்டேன். சுகேஷ் என்னை முட்டாள் ஆக்கிவிட்டார்" எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆஜரான சுகேஷ்
இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த சுகேஷ் சந்திரசேகரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நீதிமன்றத்திலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது செய்தியாளர்கள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பற்றிய கேள்விகளை கேட்டனர். ஜாக்குலின் தனது வாழ்க்கையை அழித்துவிட்டதாகக் கூறுகிறாரே என ஒரு நிருபர் அவரிடம் கேள்வி எழுப்பினார்.

காதலர் தின வாழ்த்து
அதற்கு பதிலளித்த சுகேஷ் சந்திரசேகர், "நான் அவரைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை, அவரிடம் காரணங்கள் உள்ளன. நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை." எனத் தெரிவித்தார். அப்போது அந்த செய்தியாளர் ஜாக்குலினை இன்னும் காதலிக்கிறீர்களா என்று சுகேஷிடம் கேட்க, அதற்கு அவர், "என் முடிவில் இருந்து நான் பின்வாங்கவில்லை அவருக்கு எனது இனிய காதலர் தின வாழ்த்துகள்" என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications