3ம் பாலினத்தவர்களுக்கு வேலை.. ”புதிய சட்டம் இயற்றலாம்” மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
டெல்லி: மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடு இல்லாத வேலைவாய்ப்பை வழங்க புதிய சட்டம் இயற்றலாம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் ஷானவி பொன்னுசாமி. இவர் பல்வேறு சிரமங்களை கடந்து 2010ம் ஆண்டு பொறியியல் படித்து முடித்துள்ளார். பொறியியல் படிப்பை முடித்த பின்னர், ஏர் இந்தியா நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் அதிகாரியாக பணியாற்றி வந்துருக்கிறார்.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக பணியாற்றிய பின்னர், முறையான பாலியல் அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெண்ணாக மாறி இருக்கிறார். இதனைத்தொடர்ந்து தனது பெயரையும் மாற்றிக் கொண்ட ஷானவி, தமிழ்நாடு அரசிதழிலும் பதிவு செய்துள்ளார்.

விமானப் பணிப்பெண் வேலை
இதனிடையே ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்து நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். நான்கு முறை நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டும், வேலைக்கு தேர்வானவர்களின் பட்டியலில் ஷானவி பெயர் இடம்பெறவில்லை.

நொந்துபோன ஷானவி
இதனால் நொந்துபோன ஷானவி, இதுகுறித்து ஏர் இந்தியா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் முறையிட்டு இருக்கிறார். அதற்கு, எங்கள் ஆட்சேர்ப்பு கொள்கை ஆண்கள் மற்றும் பெண்களுக்கானது மட்டுமே என்றும், திருநங்கைகளுக்கானது அல்ல என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இதனைத்தொடர்ந்து பாலியல் தன்மையை காரணம் காட்டி தனக்கு வேலை மறுக்கப்படுவதை எதிர்த்து, ஷானவி பொன்னுசாமி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடு இல்லாத வேலைவாய்ப்பை வழங்க புதிய சட்டம் இயற்றலாம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றம் யோசனை கூறியுள்ளது. தொடர்ந்து மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடு இல்லாத வேலைவாய்ப்பை வழங்க நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசுக்கு அறிவுரை
மேலும் 3 மாதத்தில் அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கையான ஷானவி பொன்னுசாமி தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறித்தியுள்ளது பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications