Bihar SIR : தேர்தல் ஆணைய நடவடிக்கையில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம்! பீகார் சார் வழக்கில் முக்கிய உத்தரவு
டெல்லி: பீகார் சார் தொடர்பான வழக்கில் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைச் செப்டம்பர் 1 காலக்கெடுவுக்குப் பிறகும் தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட், கூடுதல் கால அவகாசம் கோரிய மனு மீது குறிப்பிட்ட உத்தரவு எதுவும் பிறப்பிக்க மறுத்துவிட்டது.
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் சார் எனப்படும் சிறப்புச் சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த சார் நடவடிக்கையில் பலருடைய வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டன. இருப்பினும், சுப்ரீம் கோர்ட் சார் நடவடிக்கைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. அதேநேரம் சார் நடவடிக்கையில் ஆதாரை ஆவணமாகச் சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
முன்னதாக தேர்தல் ஆணையம் ஆட்சேபனை அல்லது திருத்தங்களைச் செப்டம்பர் 1ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் எனக் கூறியிருந்தது. அந்தக் காலக்கெடு இன்று செப்டம்பர் 1ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ஜேடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்லி அமர்வில் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தேர்தல் ஆணையம் பதில்
இந்த வழக்கில் பதிலளித்த தேர்தல் ஆணையம், "செப்டம்பர் 1ம் தேதிக்குப் பிறகும் கோரிக்கைகள், ஆட்சேபனைகள் அல்லது திருத்தங்களைத் தாக்கல் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. இந்தக் கோரிக்கைகளைச் செப்டம்பர் 1 காலக்கெடுவுக்குப் பிறகும் சமர்ப்பிக்கலாம். அப்படி காலக்கெடுவுக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள், ஆட்சேபனைகள் அல்லது திருத்தங்கள் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு பரிசீலிக்கப்படும். பரிந்துரைகளுக்கான கடைசித் தேதி வரை கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் செயல்முறை தொடரும். இவை அனைத்தும் இறுதிப் பட்டியலில் ஒருங்கிணைக்கப்படும்.
உச்ச நீதிமன்றம்
தேர்தல் ஆணையத்தின் பதிலைக் குறித்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், "செப்டம்பர் 1ம் தேதிக்குப் பிறகு கோரிக்கைகள்/ ஆட்சேபனைகள் அல்லது திருத்தங்கள் தாக்கல் செய்ய எந்தத் தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது செப்டம்பர் 1ம் தேதிக்குப் பிறகும் கோரிக்கைகள்/ ஆட்சேபனைகள்/ திருத்தங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு அவை பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பரிந்துரைகளுக்கான கடைசித் தேதி வரை இந்தச் செயல்முறை தொடரும் என்றும் இறுதிப் பட்டியலில் ஒருங்கிணைக்கப்படும் எனச் சொல்லியுள்ளனர்" என்றார்.
மேலும், தேர்தல் ஆணையமே இன்று, அதாவது செப்டம்பர் 1ம் தேதிக்கு மேல் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம் எனக் கூறிவிட்டதால், இந்த வழக்கில் வேறு உத்தரவைப் பிறப்பிக்கத் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
அரசியல் கட்சிகள்
கடந்த காலங்களில் சார் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசியல் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்திருந்தன. பொதுவெளியில் புகார் சொல்லும் கட்சிகள் விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்க்க எந்தவொரு உதவியும் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும், பூத் ஏஜெண்டுகள் உதவியுடன் அரசியல் கட்சிகளும் விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்க்க உதவ வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications