கருக்கலைப்பு வழக்கு: என்னதான் நடக்குது குஜராத் உயர்நீதிமன்றத்தில்? வெளுத்துவிட்ட உச்சநீதிமன்றம்!
டெல்லி: பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்து குட்டு வைத்துள்ளது. இந்த வழக்கில்தான் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமிர் தாவே, மனுஸ்மிருதியை மேற்கோள்காட்டி கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையானது.
குஜராத் மாநிலத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் ஒருவர் தமக்கு உருவாகிவிட்ட கருவை கலைக்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமிர் தாவே, கருவின் ஆரோக்கியம் குறித்து பரிசோதனை செய்ய உத்தரவிட்டிருந்தார். அத்துடன் மனுஸ்மிருதி அடிப்படையில் 14,15 வயது பெண்களுக்கு திருமணம் நடப்பது; 17 வயதில் தாயாவது வழக்கமானதுதான் என கூறியிருந்தது பெரும் சர்ச்சையானது.

இதனிடையே குஜராத் உயர்நீதிமன்றத்தில் தமது வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படுகிறது; இதனால் கருக்கலைப்பு செய்ய முடியாத நிலைமை ஏற்படுகிறது. ஆகையால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மருத்துவர்கள் பரிசோதனையுடன் கருக்கலைப்பு செய்ய இயலுமா? என்பது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இன்றைய விசாரணையின் போது அந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்யவும் அந்த பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
அத்துடன், கருவை கலைக்க உடனடியாக பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். ஒருவேளை கரு வளர்ந்து குழந்தை உயிருடன் இருந்தால் அதனை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.
இந்த உத்தரவை பிறப்பித்த போது, இவ்வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலையிட்டு வழக்கை ஒத்திவைப்பதாக உத்தரவை பிறப்பித்திருந்தனர். இது எப்படி சரியாகும்? குஜராத் உயர்நீதிமன்றத்தில் என்னதான் நடக்கிறது? மேல்நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் கீழ் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்? அரசியல் சாசனத்துக்கு எதிராக எப்படி குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் செயல்படுகின்றனர்? என வெளுத்துவிட்டனர். அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications