நீட் வினாத்தாள் பிரிண்ட் செய்யும் இட அட்ரஸை சொல்லிடாதீங்க.. திரும்ப லீக் ஆகிடபோகுது: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: நீட் வினாத்தாள் அச்சிட்ட தேதி, அனுப்பப்பட்ட தேதி பற்றிய விவரங்களை அளிக்க உத்தரவிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், நீட் வினாத்தாள் அச்சிடும் அச்சக முகவரியை கூறி விடாதீர்கள் இன்னொரு வினாத்தாள் கசிந்து விடப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதிக்கு 10 நாட்கள் முன்னதாக ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டது. இதில், 67 மாணவர்கள் முதலிடம் பெற்றிருந்தனர். இவர்களில், 10-க்கும் மேற்பட்டோர் முழு மதிப்பெண்களை பெற்றிருந்தனர். இவர்களில் பலர் ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சர்ச்சை எழுந்தது.

மேலும், வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட புகார்களும் எழுந்தன. எனவே, இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி மாணவர்களில் பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சுப்ரீம் கோர்ட் விசாரணை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 38 மனுக்களை இன்று விசாரித்தது.
அப்போது, நீட் தேர்வில் மோசடி செய்தவர்களை முழுமையாக கண்டறிய முடியாது. அவர்களை தனியாக பிரிக்க முடியாது. தேர்வின்போது கடைபிடிக்க வேண்டிய முறையான வழிகாட்டு நெறிகளை தேசிய தேர்வு முகமை பின்பற்றத் தவறிவிட்டதாக பீகார் காவல் துறை ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, மறு தேர்வுக்கு உத்தரவிட வேண்டும் என்று மறு தேர்வு கோரும் மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
NTA வாதம்: இதற்கு பதில் அளித்த தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மோசடி திட்டமிட்ட முறையில் நடந்ததா அல்லது தனிப்பட்ட முறையில் நடந்ததா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. மறு தேர்வு நடத்துவது என்பது நேர்மையாக தேர்வு எழுதியவர்களை தண்டிப்பதாக ஆகிவிடும். தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்த மாணவர்கள், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 56 நகரங்களைச் சேர்ந்தவர்கள். இது ஓர் உள்ளூர் முறைகேடு" என்று தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி சந்திரசூட், "இது 23 லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை உள்ளடக்கியது. வினாத்தாள் கசிந்திருந்தால் சமூக ஊடகங்கள் டெலிகிராம், வாட்ஸ் அப் மூலம் காட்டுத்தீ போல் பரவியிருக்கும். முறைகேடு செய்து பயனடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த தேர்வு நேர்மையாக நடைபெறவில்லை.
எங்கெல்லாம் முறைகேடு நடந்தது: இது தொடர்பாக தனது விசாரணை அறிக்கையை சிபிஐ அடுத்த விசாரணை தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல், முறைகேடு நடந்த மையங்கள் எவை எவை என்பதை தேசிய தேர்வு முகமை அடையாளம் காண வேண்டும். நீட் தேர்வின் நேர்மைத்தன்மையை உறுதி செய்வதில் நீதிமன்றம் அக்கறை கொண்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்கக் கூடாது.
இதற்காக, புகழ்பெற்ற நிபுணர்களைக் கொண்ட பல்துறைக் குழுவை அமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிப்பது அவசியம். ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டிருந்தால், அதுகுறித்த முழு விவரங்களையும் அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். குழுவைத் தொடர அனுமதிக்க வேண்டுமா அல்லது அமைப்பை மாற்ற வேண்டுமா என்பதை நீதிமன்றம் பின்னர் பரிசீலிக்கும். இளநிலை நீட் தேர்வை ரத்து செய்வது கடைசி முயற்சியாகவே இருக்கும்" என்று தெரிவித்தார்.
பிரிண்ட் அடிப்பது எங்கே?: மேலும், ஒவ்வொரு ஆண்டும் நீட் வினாத்தாள் எப்போது இறுதி செய்யப்படுகிறது, எப்போது அச்சிடப்படுகிறது. எப்போது தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, வினாத்தாளை அச்சகத்துக்கு அனுப்புவதற்கான போக்குவரத்து ஏற்பாடு என்ன என்ற முழு விவரங்களையும் தேசிய தேர்வு முகமை அளிக்க வேண்டும். நீட் வினாத்தாள் அச்சிடும் அச்சக முகவரியை கூறி விடாதீர்கள். இன்னொரு வினாத்தாள் கசிந்து விடப் போகிறது என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
மேலும், மறு தேர்வு கோரும் மனுதாரர்கள் அனைவரும் சேர்ந்து ஒருங்கிணைந்த கோரிக்கையை 10 பக்கங்களுக்கு மிகாமல் மனுவாக தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications