வெறுப்பு பேச்சு..திராணியில்லா மத்திய அரசுதான் காரணம்- அரசியல், மதம் பிரிக்கப்படனும்- உச்சநீதிமன்றம்!
டெல்லி: அரசியலில் இருந்து மதத்தை பிரிக்க வேண்டும்; திராணியற்ற மத்திய அரசுதான் வெறுப்பு பேச்சுகளுக்கு காரணம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கூறியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சாகல் இந்து சமாஜ் நடத்திய பேரணியில் இஸ்லாமியர் வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று விசாரணை நடைபெற்ற போது உச்சநீதிமண்ற நீதிபதிகள் கேஎம் ஜோசப், நாகரத்னா ஆகியோர் காட்டமான கருத்துகளை முன்வைத்தனர்.

வெறுப்பு பேச்சு வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்த முக்கியமான கருத்துகள்: அரசு திராணியற்றதாக இருப்பதால் வெறுப்பு பேச்சுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. இத்தகைய வெறுப்பு பேச்சுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரங்களை இழந்து நிற்கிறது அரசு.
வெறுப்பு பிரசாரங்களைத் தடுக்க வேண்டும். இத்தகைய வெறுப்பு பிரசாரம் மிகவும் கொடியது. இவற்றைத் தடுக்க அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது. நாட்டில் இதுவரையில் சகோதரத்துவம் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக இந்த சகோதரத்துவ உணர்வில் விரிசல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த தேசத்தின் குடிமக்களுக்கும் கூட சுயகட்டுப்பாடு என்பது அவசியமானது. இதர சமூக, மத மக்களைக் கொச்சைப்படுத்துதல் போக்கை கைவிடுதல் அவசியம். இது தொடர்பாக பொதுமக்களும் உறுதி மொழியேற்க வேண்டும். அரசியல்வாதிகள் தங்களது அரசியலுக்காக மதத்தைப் பயன்படுத்துகின்றனர். அதிகாரமிக்க அரசியல் சக்தியாக உருவெடுக்க இத்தகைய பிரசாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நேரு, வாஜ்பாய் என மிகச் சிறந்த பேச்சாளர்கள் இருந்தனர். கிராமங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையில் இவர்களது பேச்சை கேட்க மக்கள் திரண்டது ஒரு காலம். இப்போது எந்த ஒரு அறிவுமே இல்லாமல் பேசுகிறவர்கள் இருக்கின்றனர். அரசியலில் இருந்து மதம் பிரிக்கப்பட வேண்டும். அரசியலில் இருந்து மதத்தை பிரிப்பதன் மூலமே வெறுப்பு பேச்சுகளுக்கு முடிவு கட்ட முடியும். இத்தகைய வெறுப்பு பேச்சுகள் விவகாரங்களில் மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications