மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு! குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தவர் டாக்டர் சுப்பையா. இவர் நரம்பியல் மருத்துவர். 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், டாக்டர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

டாக்டர் சுப்பையா படுகொலை வழக்கு தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பைப் பூர்வீகமாகக் கொண்டவர் டாக்டர் சுப்பையா. இவரது தாய்மாமா பெருமாள் தம்முடைய சொத்துகளை டாக்டர் சுப்பையாவின் அம்மா அன்னக்கிளிக்கு எழுதி வைத்தார்.
இதற்கு தாய்மாமா பெருமாளின் 2-வது மனைவி அன்னபழம் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அன்னபழத்துக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. ஆனால் டாக்டர் சுப்பையாவின் தாயார் அன்னக்கிளி இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தார். இதன் பின்னர் இருதரப்பும் சமாதானமாகி டாக்டர் சுப்பையாவின் தாயார் அன்னக்கிளிக்கு 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு பிரச்சனை அப்போதைக்கு தீர்த்து வைக்கப்பட்டது.
அதே நேரத்தில் சில ஆண்டுகளுக்குப் பின்னர் (சம்பவத்திற்கு சில ஆண்டுக்கு பின்னர்) அன்னபழத்தின் மகன் - அரசு பள்ளி ஆசிரியரான பொன்னுசாமி, அன்னக்கிளிக்கு 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதனையடுத்து டாக்டர் சுப்பையா 2.5 ஏக்கர் நிலத்தை மனைவிக்கு எழுதி வைத்தார். இந்த நிலத்துக்கு எவர் ஒருவரும் உரிமை கோராமல் இருக்க நீதிமன்றத்தில் தடையும் வாங்கினார் டாக்டர் சுப்பையா. அத்துடன் பொன்னுசாமி மீது போலீசில் புகார் கொடுத்தும் வைத்தார் டாக்டர் சுப்பையா.
இதனையடுத்தே 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி டாக்டர் சுப்பையா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப் படையினரால் வெட்டப்பட்டார். இதில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்ற டாக்டர் சுப்பையா 2013-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கில் பொன்னுசாமி உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அய்யப்பன் என்பவர் அப்ரூவரானார். சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு விசாரணை நடைபெற்றது. இவ் வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ந் தேதி நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார். அதில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் அப்ரூவர் அய்யப்பன் தவிர பொன்னுச்சாமி, வில்லியம்ஸ், போரிஸ், செல்வ பிரகாஷ், முருகன், பேசில், மேரி புஷ்பம், ஜேம்ஸ் சதீஷ்குமார், ஏசு ராஜன் ஆகிய 9 பேர் கொலைக் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார் நீதிபதி அல்லி.
அத்துடன் பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது; மேரி புஷ்பம், ஏசு ராஜன் ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்ரூவர் அய்யப்பனுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை.
இத்தீர்ப்பை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விசாரணை நீதிமன்றம் வழக்கு விவரங்களை அனுப்பி வைத்தது. அதேநேரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனு மீது கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் இதனை விசாரித்தனர்.
அப்போது இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் என மொத்தம் 9 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும் 9 பேரும் வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் உடனடியாக விடுதலை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 7 பேருக்கு தூக்கு தண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விசாரணை நீதிமன்றம் விதித்தது. இந்த நிலையில் அவர்களின் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் அந்த 9 பேரையும் விடுதலை செய்தது தவறு என கூறிய நீதிமன்றம் அவர்களது விடுதலையை ரத்து செய்து, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கொலை வழக்கில் தொடர்புடைய பொன்னுசாமி, மேரி புஷ்பம் ஆகியோரை தவிர்த்து அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக சரணடையவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கான தண்டனை ரத்து செய்தது மிகப் பெரிய தவறு.
விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியல்ல, விசாரணை நீதிமன்றம் விசாரித்து அளித்த தீர்ப்பை முறையாக ஆராயாமல் உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது என்றும் அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications