முல்லைப் பெரியாறு: "தமிழ்நாடு கேரளா மோதல் ஸ்கூல் பசங்க சண்டை மாதிரி இருக்கு" - சுப்ரீம் கோர்ட்
டெல்லி: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாடும், கேரளாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பது பள்ளி குழந்தைகள் சண்டை போடுவது போல் உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்தின் எந்தவொரு செயலும் கேரளாவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சிலர் மிகைப்படுத்தி பிரச்சாரம் செய்து வருவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முல்லை பெரியாறு அணையின் அருகே மரங்களை வெட்டுவது உட்பட சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை கேரள அரசு ரத்து செய்ததாகக் கூறி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நஹ்படே, நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரளா தடையாக இருப்பதாகக் கூறினார். "நாங்கள் நீதிமன்ற ஆணையை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். 15 மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டது, பின்னர் திடீரென ரத்து செய்யப்பட்டது. கேரளாவின் உண்மையான நோக்கம் அங்குள்ள அணையை இடிக்க வேண்டும் என்பதுதான். அதற்காக என்னென்ன தொல்லை கொடுக்க முடியுமோ அவை அத்தனையையும் செய்கிறது கேரள அரசு" என்று வாதிட்டார்.
"அணை இப்போது 25 ஆண்டுகள் பழமையானது. ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் நடக்க வேண்டிய மறுஆய்வை அவர்கள் தவிர்க்கிறார்கள்" என்று கேரள அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், "தமிழ்நாட்டில் ஏதாவது செய்தால், கேரளா பேரழிவிற்கு உள்ளாகும் என்று சிலர் மிகைப்படுத்தி பிரச்சாரத்தை உருவாக்கியுள்ளனர். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாடும், கேரளாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பது பள்ளி குழந்தைகள் சண்டை போடுவது போல் உள்ளது; இது போன்ற விவரங்கள் உண்மையில் நீதித்துறை தலையீடு தேவையா என்று நாங்கள் நினைக்கிறோம்.
மேற்பார்வைக் குழு, இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை குழு கண்டுபிடிக்க வேண்டும். உரிய தீர்வு காண இயலாவிட்டால் உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இன்றிலிருந்து 4வது வாரத்தில் இந்த நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் நீதிமன்றம் தீர்வு காணும்" என முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அணை பராமரிப்பு பணிகளைக் கேரளா மேற்கொள்ள விடுவதில்லை, மரத்தை வெட்ட விடுவதில்லை என இரு மாநிலங்களும் மாறி மாறி குற்றம் சாட்டி வருவதை உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையே நீண்டகால பிரச்சனை இருந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதி கேரளாவிற்குள் இருந்தாலும், அதன் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் தண்ணீர் தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களின் உயிர்நாடி.
முல்லைப் பெரியாறு நீர் உரிமைக்காக தமிழ்நாடும் கேரளாவும் தொடர் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. 2014 ஆம் ஆண்டு தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்து, அணை பாதுகாப்பானது என்றும், ஆனால் அணையின் நீர்த்தேக்கத்தில் நீர் மட்டத்தை 142 அடியாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியது. பின்னர் அணையை நிர்வகிக்க மேற்பார்வைக் குழுவை அமைத்தது.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் தற்போதுள்ள அணையை வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. அதேசமயம், கடந்த 2018 ஆம் ஆண்டு கேரள வெள்ளத்தின் போது, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது, அதில் கேரள வெள்ளத்தின் போது நீர் மட்டத்தை 139 அடியாக பராமரிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications