செல்லாது.. செல்லாது! பாஜக வெற்றியை நிராகரித்த உச்சநீதிமன்றம்.. சண்டிகர் மேயரானர் ஆம் ஆத்மி வேட்பாளர்
டெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த சண்டிகர் மேயர் தேர்தலில் குளறுபடிகள் ஏற்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆம் ஆத்மி வேட்பாளர் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவித்திருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் இப்படி இருக்கையில், இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த அதிர்ச்சி குறைவதற்குள், தேர்தல் அதிகாரி வாக்குள் சீட்டில் கிறுக்குவதை போன்ற மற்றொரு வீடியோ வெளியாகி அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடிய ஆம் ஆத்மி, தேர்தலில் முறைக்கேடு நடந்திருப்பதக கூறியது. இதனையடுத்து, வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிப்பெற்றதாக அறிவித்தது.
பின்னணி: பஞ்சாப் மாநிலத்திற்கும், ஹரியான மாநிலத்திற்கும் சண்டிகர் தலைநகரமாக செயல்பட்டு வருகிறது. சண்டிகர் நகராட்சியில் மொத்தம் 35 இடங்கள் இருக்கின்றன. இதில் பாஜக சார்பில் 14 கவுன்சிலர்களும், அகாலிதளம் சார்பில் 1 கவுன்சிலர் என மொத்தம் 15 கவுன்சிலர்கள் பாஜக பக்கம் இருக்கின்றனர். மற்றொருபுறம் 13 கவுன்சிலர்கள் ஆம் ஆத்மி சார்பிலும், 7 கவுன்சிலர்கள் காங்கிரஸ் சார்பிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.
கூட்டணி: எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி எனும் பெயரில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் இணைந்து போட்டியிட உள்ள நிலையில், இதற்கு முன்னோட்டமாக சண்டிகர் மேயர் தேர்தலில் இணைந்து போட்டியிட காங்கிரஸும், ஆம் ஆத்மியும் முன் வந்தன. இயல்பாகவே இந்த கூட்டணிக்குதான் அதிக வாக்குகள் இருக்கிறது என்பதால் இவர்கள் தரப்பிலிருந்தே மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கருதப்பட்டது.
தேர்தல்: மேயர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் நிறுத்தப்பட்டார். கடந்த 30ம் தேதி திட்டமிட்டபடி தேர்தல் தொடங்கியது. இந்த தேர்தலில் எம்பியும் வாக்களிக்க முடியும் என்பதால், பாஜக எம்பியான கிர்ரோன் கெர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தார். 30ம் தேதி வாக்குப்பதிவு திட்டமிட்டபடி நடைபெற்றது. அன்றே வாக்குகளும் எண்ணப்பட்டன.
சர்ச்சை: பாஜக சார்பில் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மனோஜ் சோங்கர் 16 வாக்குகளை பெற்றிருந்தார். அதேபோல காங்கிரஸ்+ஆம் ஆத்மி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட குல்தீப் குமார் 20 வாக்குகள் கிடைத்தன. ஆனால் அதில், 8 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. எனவே பாஜகவின் மனோஸ் சோங்கர் புதிய மேயராக அறிவிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
உயர்நீதிமன்றம்: தேர்தல் அதிகாரி பாஜகவுக்கு சாதகமாக நடந்துக்கொண்டதாக கூறி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், தேர்தல் அதிகாரி வாக்கு சீட்டில் எதையோ எழுதுவது தெரிந்தது. இதனையடுத்து பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கு அவசர வழக்காக கடந்த 31ம் தேதி விசாரிக்கப்பட்டது, விசாரணையின் இறுதியில், மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
வெற்றி: மேலும் இந்த சம்பவம் குறித்து சண்டிகர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் உச்சநீதிமன்ற படியை காங்கிரஸும், ஆம் ஆத்மியும் ஏறின. இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தேர்தல் விதி மீறலில் தேர்தல் அதிகாரி ஈடுபட்டிருப்பது உறுதியாகியுள்ளது என்றும், எனவே காங்கிரஸ்+ஆம் ஆத்மி கூட்டணியின் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாகவும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications