டெல்லி மின்வாரிய தலைவர் பதவி ஏற்புக்கு தடை- உச்சநீதிமன்ற உத்தரவால் மத்திய பாஜக அரசுக்கு செட்பேக்!
டெல்லி: டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக மத்திய அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி உமேஷ்குமார் பதவி ஏற்க உச்சநீதிமன்றம் அதிரடியாக இடைக்கால தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மத்திய அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஆம் ஆத்மி அரசு நியமித்த ஆணையத்தின் தலைவரை மத்திய அரசு ஏற்க மறுத்தது. அதேநேரத்தில் மத்திய அரசானது, ஓய்வு பெற்ற நீதிபதி உமேஷ்குமாரை நியமனம் செய்தது. ஆனால் உமேஷ் குமார் பதவியேற்பதற்கு எதிராக இருந்தது டெல்லி ஆம் ஆத்மி அரசு.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், ஓய்வு பெற்ற நீதிபதி உமேஷ்குமார் பதவியேற்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 11-ந் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவானது மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி தலைவர்கள், உமேஷ்குமார் நியமனத்தில் பிடிவாதம் காட்டும் துணை நிலை ஆளுநருக்கு சரியான பாடம் கற்றுத் தந்துள்ளது உச்சநீதிமன்றம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications