அரி கொம்பன் யானை எங்கே? பொது நல மனு.. நேரத்தை வீணடித்ததாக 25 ஆயிரம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்
டெல்லி: அரிகொம்பன் யானை எங்கே உள்ளது என்ற விவரத்தை தெரிவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு அபராதமும் விதித்தது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னைக்கானல் மற்றும் சாந்தம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் "அரி கொம்பன்" என்று அழைக்கப்படும் காட்டு யானை வலம் வந்தது. அரி கொம்பன் காட்டு யானை ஊருக்குள் புகுந்து அங்குள்ள கிராம மக்கள் 8 பேரை கொன்றது. விளை நிலங்களையும் சேதப்படுத்தியது. இதைத்தொடர்ந்து கேரள வனத்துறையினர் அந்த காட்டு யானையை மயக்க ஊசிகள் செலுத்தி பிடித்து, தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேதக்கானம் என்ற வனப்பகுதியில் விட்டனர்.

அந்த யானையின் நடமாட்டத்தை கண்டறிய கழுத்தில் ரேடியோ காலர் எனப்படும் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி தொடர்ந்து கண்காணித்தனர். இந்த யானை தேனி மாவட்டம் கம்பம் ஊருக்குள் புகுந்தது. மக்களை அச்சுறுத்திய இந்த யானை கடந்த மாதம் 5 ஆம் தேதி பிடிபட்டது. பின்னர் இந்த யானையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அருகே வனத்துறையினர் விட்டனர். தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை இரு மாநில வனத்துறையினரும் கண்காணித்து வருகின்றனர்.
அண்மையில் அரிகொம்பன் யானை உடல் மெலிந்து காணப்பட்ட புகைப்படமும் வெளியானது. இதனிடையே, கேரளாவை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அரிகொம்பன் யானை பாதுகாப்பு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. வனப்பகுதியில் விடப்பட்ட அரிகொம்பன் எங்கு உள்ளது? எந்த நிலையில் உள்ளது? உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டு இருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற நேரத்தை வீணடித்தற்காக ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது. மேலும் இந்த மனு மீதான விசாரணையின் போது, மனுதாரரை கடிந்து கொண்ட நீதிபதிகள், நீதிமன்றம் கடுமை காட்டாமல் பண்பாக நடப்பதால் அதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் எனவும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீதிமன்றத்தை இயக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications