ரபேல் போர் விமான ஒப்பந்தம்.. மீண்டும் விசாரிக்க கோரி பொதுநல மனு.. தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: இந்திய இடைத்தரகர்களுக்கு டாசால்ட் அவியேஷன் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக கூறி பிரான்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியானதை சுட்டிக்காட்டி ரபேல் ஒப்பந்தம் குறித்து புதிதாக மீண்டும் விசாரிக்க கோரி வழக்கறிஞர் எம்.எல் ஷர்மா மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 126 ஜெட் ரபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது.
இதில், 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும் என்றும், மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

புதிய ஒப்பந்தம்
இந்த நிலையில், மோடி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த, 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, முன்பு எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக அறிவித்தார். 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்றும் அவர் அறிவித்தார். இதையடுத்து புதிதாக 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு
இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்தார். மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டாலும், அந்த மனுவை உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்திருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிஷாந்த் பூஷன் ஆகியோர் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்தனர். அந்த சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்துவிட்டது.

மீண்டும் விசாரிக்க கோரி மனு
இந்த நிலையில், ரபேல் ஒப்பந்தத்தில், இந்திய இடைத்தரகர்களுக்கு டாசால்ட் அவியேஷன் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக பிரான்ஸ் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ள நிலையில், ரபேல் ஒப்பந்தம் குறித்து புதிதாக மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் எம்.எல் ஷர்மா என்பவர் பொது நல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

யாரும் தடுக்கவில்லை
அப்போது மனுதாரர் தரப்பில் மேலும் சில வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ''நாங்கள் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து விட்டோம்'' என்றார். இதையடுத்து மனுவை வாபஸ் பெற அனுமதி அளிக்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, ரபேல் விவகாரம் தொடர்பாக சிபிஐயிடம் முறையிடுகிறேன் என்று எம்.எல். ஷர்மா கூறினார். இது குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, ''உங்களை யாரும் தடுக்கவில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications