எத்தனால் பெட்ரோலுக்கு எதிரான வழக்கு.. சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த மிக முக்கிய உத்தரவு.. நோட் பண்ணுங்க
டெல்லி: நமது நாட்டில் E20 எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விற்கப்படுகிறது. இருப்பினும், இதனால் வாகனங்கள் பாதிக்கப்படுவதாகச் சொல்லி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
இந்தியாவில் இப்போது 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் தான் விற்கப்படுகிறது. எத்தனால் கரும்பில் இருந்து பெறப்படும் நிலையில், இதன் மூலம் விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கிறது. மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதியும் கணிசமாகக் குறைவதால் மத்திய அரசு இதை நாடு முழுக்க விரிவுபடுத்தியுள்ளது.

புகார்
இருப்பினும், ஒரு தரப்பினர் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளால் தங்கள் வாகனங்கள் டேமேஜ் ஆவதாகப் புகாரளித்தனர். மேலும், மைல்லேஜ் கூட கணிசமாகக் குறைவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். வழக்கமான பெட்ரோல் மற்றும் எத்தனால் கலப்பு பெட்ரோல் என இரு ஆப்ஷன்கள் கூட இல்லை என்றும் அனைவரும் வேறு வழியில்லாமல் 20% எத்தனால் கலப்பு பெட்ரோலை யூஸ் செய்வதாகவும் பலரும் குற்றஞ்சாட்டினர்.
உச்ச நீதிமன்றம்
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. 2023க்கு முந்தைய வாகனங்களில் எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு ஏற்ப மாற்றங்கள் இல்லாததால் அந்த வாகனங்களுக்கு எத்தனால் இல்லாத பெட்ரோல் தேவை என மனுதாரர் கோரினார்.
விசாரணையின் போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷாதன் ஃபராசத், 2021 நிதி ஆயோக் அறிக்கையைச் சுட்டிக்காட்டினார். அந்த அறிக்கை பெட்ரோலில் இயங்கும் பழைய வாகனங்கள், குறிப்பாக 2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் பயன்படுத்தப்படுவதால் 6% எரிபொருள் அதிகம் செலவாகும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
முக்கிய வாதம்
அவர் மேலும், "எங்களுக்கு ஒரு மாற்று வழி கொடுக்கப்பட வேண்டும்... நாங்கள் E20-க்கு எதிரானவர்கள் அல்ல.. ஆனால் சில வாகனங்கள் அதற்கு ஏற்ப செயல்படாது. ஏப்ரல் 2023க்குப் பிந்தைய வாகனங்கள் மட்டுமே E20-யை ஏற்றுக்கொள்ள முடியும். E20 பெட்ரோல் வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால், பழைய வாகனங்கள் வைத்திருப்போருக்கு மாற்று வழி வேண்டும். இப்போது நாட்டில் E10 பெட்ரோல் எங்கும் கிடைப்பதில்லை.
இப்போது எத்தனால் கலக்காத பெட்ரோலை பழைய வாகனங்கள் வைத்திருப்போரால் வாங்க முடிவதில்லை. இது அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. மேலும், பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. பெட்ரோல் பம்புகளிலும் சரியான குறியீடு இல்லை. இவை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019-ன் கீழ் தகவலறிந்த நுகர்வோர் தேர்வுக்கான உரிமையை மீறுவதாக உள்ளது. மேலும், எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தும்போது அவை எஞ்சின் பாகங்களை அரிக்கிறது, எரிபொருள் திறனைக் குறைக்கிறது இதனால் இன்சூரன்ஸ் கூட இல்லாமல் போகிறது.
வேறு ஆப்ஷன் இல்லை
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் எத்தனால் கலக்காத பெட்ரோல் பரவலாகக் கிடைக்கிறது. ஆனால், அங்குள்ள பம்புகளில் எந்தளவுக்கு எத்தனால் இருக்கிறது என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் தகவலறிந்த முடிவை எடுக்க முடியும். ஆனால், இந்தியாவில் எத்தனால் கலந்த எரிபொருள் மட்டுமே விற்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பு வாதம்
இருப்பினும், அரசுத் தரப்பில் ஆஜரானஆர். வெங்கடரமணி, மனுதாரரை பெரும் லாபிகளுக்கான ஒரு கருவி என்றும் மனுதாரரே பிரிட்டனைச் சேர்ந்தவர் என்றும் வாதத்தை முன்வைத்தார். E20 கரும்பு விவசாயிகளுக்குப் பயனளிக்கும் என்றும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், "இந்தியா என்ன வகையான எரிபொருளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வெளிநாட்டினர் தீர்மானிப்பார்களா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இரு தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்தார். அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications