குஜராத் பில்கிஸ் பானுவின் துயரம்.. 11 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு! இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி: 2002 குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பெண் பில்கிஸ் பானு உள்ளிட்ட 3 பேரை கூட்டு பலாத்காரம் செய்து குழந்தை உட்பட 7 பேரை கொன்ற 11 பேரை கடந்த ஆண்டு குஜராத் அரசு முன்விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து கடந்த 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக மத்திய அரசு 2005 ஆம் ஆண்டு அமைத்த விசாரணை ஆணையம், ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் அறிவித்தது.

ஆனால், இந்த ரயிலை இஸ்லாமியர்கள் எரித்ததாக கூறி குஜராத் முழுவதும் இந்துத்துவ அமைப்பினர் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கட்டுப்பாடுகள் இன்றி கோரத் தாக்குதல்கள் நடைபெற்ற. 2 வாரங்கள் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் தகர்க்கப்பட்டு 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். 28 ஆம் தேதி தொடங்கிய கலவரம் மார்ச் மாதம் வரை தொடர்ந்தது.
தஹோத் மாவட்டத்தில் உள்ள ரந்திக்புர் கிராமத்தில் மார்ச் 3 ஆம் தேதி கலவரம் வெடித்தது. அங்கு 30 பேர் கொண்ட கலவர கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் 19 வயது கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு மற்றும் அவரது பெண் குழந்தை மற்றும் பிற 15 குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியது. இதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் கலவர கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர்.
நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதன் முதல் கட்ட விசாரணை குஜராத்தின் அகமதாபாத்தில் தொடங்கப்பட்ட நிலையில், சாட்சிகளை அழிக்கப்பட்டதாகவும் மற்றும் சாட்சியங்களை சேதப்படுத்தியதாகவும் கூறி வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டது. 2008 ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழ்ங்கியது. இவர்களின் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு உறுதி செய்தது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேர் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்ததாலும், குற்ற தன்மையை கருத்தில் கொண்டும் விடுவிக்க குஜராத் அரசு பொதுமன்னிப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக தண்டனை பெற்ற 11 பேரும் கோத்ரா துணைச் சிறையில் இருந்து கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண்ணியவாதிகள் என பல்வேறு தரப்பினர் 11 பேர் விடுதலையை கண்டித்தனர். இந்த நிலையில், 11 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் விசாரணை தொடங்கியது. 11 பேர் விடுதலை தொடர்பாக குஜராத் அரசு விளக்கமளிக்குமாறும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் 11 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜால் புயான் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications