குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை.. தனிநபர் சட்டங்களால் தடுக்க முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: நமது நாட்டின் தனிநபர் சட்டங்கள் என்ன தான் விரும்பிய நபருடன் வாழும் உரிமையைக் கொடுத்தாலும் இந்த சட்டம் குழந்தை திருமணங்களைத் தடுக்கும் சட்டத்தை மீற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குழந்தை திருமணங்களைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்த தீர்ப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நமது நாட்டில் முன்பெல்லாம் குழந்தை திருமணங்கள் சர்வ சாதாரணமாக நடக்கும். இதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க மத்திய அரசு குழந்தை திருமணங்களைத் தடுக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது.

தற்போதுள்ள சட்டத்தின்படி 18 வயது நிரம்பினால் மட்டுமே பெண்களைத் திருமணம் செய்ய முடியும். அதேபோல ஆண்களுக்குக் குறைந்தபட்ச திருமண வயது 21ஆக இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்: இதற்கிடையே குழந்தை திருணங்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் இப்போது முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது குழந்தைத் திருமணத்தைத் தடை செய்யும் சட்டத்தைத் தனிநபர்களுக்கு உரிமை தரும் சட்டங்களால் தடுக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.
அதாவது நமது நாட்டின் தனிநபர் சட்டம் ஒருவர் தனக்கு விருப்பமான துணையுடன் இணைந்து வாழும் சுதந்திரத்தை அனுமதிக்கிறது. ஆனால், இந்த சட்டம் குழந்தை திருமணங்களைத் தடுக்கும் சட்டத்தை மீற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தடுக்காது: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்தது. மேலும், நாட்டில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் சட்டத்தைத் திறம்பட செயல்படுத்தத் தேவையான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது. குழந்தை திருமணங்களைத் தடுக்கும் சட்டத்தைத் தனிநபர் சட்டத்தால் தடுக்க முடியாது என்பதை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டனர்.
இதுபோன்ற திருமணங்கள் சிறார்கள் தங்கள் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மீறுவதாகும் என்றும் தெரிவித்தனர். குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதிலும், சிறார்களைப் பாதுகாப்பதிலும் தான் அதிகாரிகள் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், அதே நேரம் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவும் நடவடிக்கை தேவை என்றனர்..
அணுகுமுறை: நீதிபதிகள் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள நிலைமையைப் பொறுத்து குழந்தை திருமணங்களைத் தடுக்க உத்திகளைக் கையாள வேண்டும். பல துறைகளின் ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டுமே குழந்தை திருமணங்களைத் தடுக்க முடியும். இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு நாம் பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள நிலைமையைச் சார்ந்து அணுகுமுறைகளை கையாள வேண்டும்" என்றார்.
மேலும், குழந்தை திருமணத் தடைச் சட்டத்தில் சில குறைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், அதை முழுமையாக ஒழிக்கவும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006 இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications