மதானி ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு கேரளா செல்ல அனுமதிக்கப்படுவாரா?உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு!
டெல்லி: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாசர் மதானியின் ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு கேரளா செல்ல அனுமதி கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 2008-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஒருவர் பலியானார். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இவ்வழக்கு தொடர்பாக கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் கோவை தொடர் வெடிகுண்டு சம்பவங்களிலும் குற்றம்சாட்டப்பட்டவர் மதானி.

கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்ட மதானி, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பல ஆண்டுகள் சிறைவாசத்தில் பல்வேறு முறை மதானி ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஒருவழியாக 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அப்துல் நாசர் மதானிக்கு ஜாமீன் வழங்கியது.
இதனடிப்படையில் கடந்த 9 ஆண்டுகளாக பெங்களூரில் தங்கி உள்ளார் மதானி. தமக்கு பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் இருப்பதாலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி கேரளா செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரியும் பல முறை மனுத் தாக்கல் செய்தார் மதானி. இந்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மதானி.

மதானியின் மனு மீதான விசாரணையின் போது, அவரது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கூடாது; கேரளா செல்ல அனுமதிக்கக் கூடாது என கர்நாடகா அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக விசாரணை முடிந்துவிட்ட நிலையில் மதானியை ஏன் கேரளா செல்ல அனுமதிக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு பதிலளித்த கர்நாடகா அரசு, மதானியை கேரளா செல்ல அனுமதித்தால் சாட்சியங்களை அழித்துவிடுவார். இவ்வழக்கில் மேலும் 6 பேரை கைது செய்ய வேண்டியுள்ளது என வாதிடப்பட்டது. இவ்வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கக் கூடும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications