சீமான் மீதான விசாரணைக்கு தடை நீட்டிப்பு.. தமிழக அரசு, நடிகை பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
டெல்லி: சீமானுக்கு எதிரான நடிகையின் புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமானின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், நடிகைக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரைத் தொடர்ந்து சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376-ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சீமான் வழக்கு
இதற்கிடையே சீமான், வளசரவாக்கம் காவல்துறை தன் மீது பதிவு செய்துள்ள வழக்கு புகார்தாரர் கடிதத்தின் அடிப்படையில் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வேண்டுமென்றே விசாரிப்பதால் இந்த வழக்கை முடித்துவைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது புகார்தாரர் விஜயலட்சுமி தரப்பு வாதத்தையும் கேட்டது ஐகோர்ட். திருமணம் செய்வதாகக் கூறியது, உறவில் இருந்தது போன்றவைகள் விஜயலட்சுமி தரப்பில் கூறப்பட்டது.
சீமான் மனு தள்ளுபடி
இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம், "நடிகை இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. இது சாதாரண வழக்கு அல்ல எனக் கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்தது.
மிரட்டல் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுள்ளது தெளிவாகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. எனவே தன்னிச்சையாக திரும்பிப் பெறப் முடியாது. விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியிருப்பது சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி இருக்கிறது என நீதிபதி தெரிவித்தார்.
சீமான் மீதான புகார் சாதாரணமானது அல்ல
சீமான் மீதான இந்த வழக்கை ஆராய்ந்தபோது நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை. திரைத்துறை தொடர்பான சிக்கலில் இருந்த அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவில் இருந்துள்ளார். தன்னிடம் இருந்து பெருந்தொகை பெறப்பட்டதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் விஜயலட்சுமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கைப் பொறுத்தவரை சீமான் மீதான புகாரை எளிமையாக விட்டு விட முடியாது. எனவே இந்த வழக்கிலிருந்து சீமானை விடுவிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், 12 வாரங்களுக்குள் சீமான் மீதான வழக்கை விசாரணை நடத்தி அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சீமானுக்கு சம்மன் அனுப்பி சென்னை காவல் துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
உச்சநீதிமன்றத்தில் சீமான் மனு
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். அந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்ததோடு, இந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர்.
பின்னர், விசாரணையை இன்றைய நாளுக்கு தள்ளி வைத்தனர். மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக இருதரப்பிலும் சமரசமாக பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தனர்.
இடைக்கால தடை நீட்டிப்பு
இந்த நிலையில், வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 31 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்குள் சீமானின் மேல்முறையீடு மனுவுக்குப் பதில் அளிக்க நடிக்கைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சீமானுக்கு எதிரான வழக்கின் புலன் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications