மசூதிக்குள் 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிடுவதை எப்படி குற்றமாக கருத முடியும்? சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: கர்நாடகா மாநிலத்தில் உள்ள மசூதி ஒன்றில் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பியதாக இருவர் மீது உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. அப்போது ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை எழுப்புவது எப்படி கிரிமினல் குற்றமாகக் கருத முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள மசூதி ஒன்றில் ஜெய் ஸ்ரீராம் என்று இருவர் கோஷமிட்டதாகச் சொல்லி உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும், அந்த நடவடிக்கையைக் கர்நாடக ஐகோர்ட் ரத்து செய்தது.

"ஜெய் ஸ்ரீராம்" என்று முழக்கமிடுவது யாருடைய மத உணர்வுகளையும் அவமதிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி, கர்நாடக உயர்நீதிமன்றம் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது தான் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை எழுப்புவது எப்படி கிரிமினல் குற்றமாகக் கருத முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான காமத், "இது ஐபிசியின் 153 ஏ பிரிவின் கீழ் குற்றம்.. மாற்று வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று அவர்கள் இதுபோல கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதை எப்படி அனுமதிக்க முடியும்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், "அவர்கள் ஒரு குறிப்பிட்ட மத கோஷம் அல்லது ஒரு பெயரைக் கூச்சலிட்டு இருக்கிறார்கள். இதை எப்படி குற்றமாகக் கருத முடியும். மேலும், மசூதிக்குள் வந்து கோஷம் எழுப்பியதாகச் சொல்லப்படும் நபர்கள் எப்படி அடையாளம் காணப்பட்டனர்" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மேல்முறையீடு செய்த ஹைதர் அலி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், "அந்த பகுதி முழுக்க சிசிடிவி கேமரா பொருந்தப்பட்டு இருந்தது. இவர்கள் இருவரும் அந்த கேமராவில் பதிவாகி இருந்தனர்" என்று குறிப்பிட்டனர்.
இதைக் கேட்டு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கேமராவில் பதிவாகி இருக்கிறார்கள் என்பதற்காகவே அதை அவர்கள் தான் செய்தது என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும் என்ற கேள்வி எழுப்பினர்.
பின்னணி: அதாவது கீர்த்தன் குமார் மற்றும் சச்சின் குமார் ஆகிய இருவரும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதிக்குள் நுழைந்து ஜெய் ஸ்ரீராம் எனக் கோஷமிட்டதாக அப்பகுதியில் உள்ள கடபா காவல் நிலையத்தில் ஹைதர் அலி என்பவர் புகார் அளித்தார். அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
இதை எதிர்த்துப் பாதிக்கப்பட்டவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட் கடந்த செப். 13ம் தேதி இருவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா, "ஜெய் ஸ்ரீ ராம் என்று யாராவது கோஷமிடுவதால் அது மத உணர்வை எப்படிச் சீர்குலைக்கும் என்று எனக்குப் புரியவில்லை. அந்தப் பகுதியில் இந்து- முஸ்லிம்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதாகப் புகார்தாரரே கூறும் போது, இதை ஒரு குற்றமாக எப்படிக் கருத முடியும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications