கிருஷ்ண ஜென்மபூமி விவகாரம்! ஷாஹி ஈத்கா மசூதியில் ஆய்வு.. தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமிக்கு அருகில் இருக்கும், ஷாஹி ஈத்கா மசூதியில் சர்வே நடத்த தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயில் ஒன்று இருக்கிறது. இந்த கோயில் இருக்கும் பகுதியில்தான் கிருஷ்ணர் பிறந்ததாக சொல்லப்படுகிறது. அதன் அடையாளமாகவே கிருஷ்ண ஜென்மபூமி கோயில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்ததாகவும், ஆனால் கோயிலின் சில பகுதிகளை இடித்துவிட்டு ஷாஹி ஈத்கா மசூதியை கடந்த 1669 - 70ம் ஆண்டில் அப்போதைய முகலாய மன்னர் அவுரங்கசீப் தலைமையில் கட்டப்பட்டது என இந்துத்துவ அமைப்புகள் தொடர்ச்சியாக கூறி வருகின்றன.

இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், கடந்த, 1968ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தான் மற்றும் ஷாஹி மஸ்ஜித் இத்கா அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சர்ச்சைக்குரிய நிலத்தில், 10.9 ஏக்கர் நிலம் கோவிலுக்கும், மீதமுள்ள, 2.5 ஏக்கர் நிலம் மசூதிக்கும் பிரிக்கப்பட்டன. ஆனால், இந்த பிரிவு ஏற்கத்தக்கதல்ல எனவும், மொத்த நிலமும் கிருஷ்ண ஜென்மபூமிக்கு சொந்தமானதுதான் என்றும் இந்துத்துவ அமைப்புகள் மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடந்த இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடின. ஆனால் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், சர்வே எடுக்க உத்தரவிட்டனர். மேலும் சர்வே நடைமுறைகள் குறித்து டிச.18ம் தேதி நடைபெறும் மறு விசாரணையில் ஆலோசிக்கப்படும் என்றும் கூறினர்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தன. ஆனால் உச்சநீதிமன்றமும் தடை உத்தரவை பிறப்பிக்க மறுத்துவிட்டது. இந்த கோயில் தொடர்பான மற்றொரு வழக்கு ஜனவரி 9ம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், தற்போது சர்வேவை நிறுத்தி வைப்பது குறித்து எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று நீதிமன்றம் தெளிவாக கூறிவிட்டது. இது இஸ்லாமிய அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மட்டுமல்லாது ஷாஹி இத்கா மசூதி வளாகத்தை நீதிமன்றக் கண்காணிப்பில் உள்ள 3 பேர் கொண்ட வழக்கறிஞர் குழு சர்வே நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு இந்துத்துவ அமைப்புகளுக்கு சாதகமாக முடிந்தால் கடந்த 1968-ம் ஆண்டு கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சங்கத்துக்கும் ஷாஹி ஈத்கா மசூதி நிர்வாகத்துக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மசூதி இருக்கும் நிலம் உட்பட 13.37 ஏக்கர் நிலமும் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலுக்கு சொந்தமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications