2ஜி வழக்கு- உச்சநீதிமன்ற தீர்ப்பில் திருத்தம் கோரும் மத்திய அரசின் மனுவை பட்டியலிட பதிவாளர் மறுப்பு!
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திருத்தம் மற்றும் தெளிவான விளக்கம் கோரிய மத்திய பாஜக அரசின் மனுவை பட்டியலிட பதிவாளர் மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், 2012-ல் ஒரு தீர்ப்பளித்தது. அதில், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு என்பது ஏல முறையில்தான் இருக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என வழங்கப்பட்ட அனைத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலங்களையும் உச்சநீதிமன்றம் அதிரடியாக ஒட்டுமொத்தமாக ரத்து செய்தது.

2012-ல் உச்சநீதிமன்றம் அளித்த இத்தீர்ப்பில் திருத்தம் தேவை; தெளிவான விளக்கம் தேவை என கடந்த ஆண்டு டிசம்பரில் உச்சநீதிமன்றத்தில் மத்திய பாஜக அரசு ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. மத்திய அரசின் இந்த மனுவில், ஏல முறைக்குப் பதில் நிர்வாக நடைமுறைகளின் மூலமாக அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவான பட்டியலிடுவதற்காக பதிவாளர் முன்பாக வந்தது. ஆனால் உச்சநீதிமன்ற பதிவாளரோ, மத்திய அரசின் மனுவை பட்டியலிட மறுத்துவிட்டார். மேலும் இந்த உத்தரவை எதிர்த்து அடுத்த 15 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு செய்யலாம் எனவும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 18-வது லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மத்திய பாஜக அரசின் மனுவை உச்சநீதிமன்ற பதிவாளர் பட்டியலிட மறுத்துள்ளது தேர்தல் களத்திலும் எதிரொலிக்கக் கூடும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications