மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்க முடியாது.. மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி: மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்த நிலையில், இந்த உத்தரவை மறு சீராய்வு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது தமிழகத்தில் மக்கள் நல பணியாளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் 13,500 மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மக்கள் நல பணியாளர்கள்
இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதில் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை கடந்த 11.04.2023-இல் கூறியது.
தீர்ப்பில் கூறப்பட்டது என்ன?
அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவானது ஏற்கப்படுகிறது. மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவினை ரத்து செய்கிறோம்.
மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடரும் வரை மக்கள் நல பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக மட்டுமே தொடர்வார்கள். தமிழ்நாடு அரசின் திட்டப் பணிக்கு சேராமல் உள்ளவர்களுக்கு 6 மாத சம்பளம் ரூ.25,851 வட்டி இல்லாமல் அவர்களுக்கு அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்குவதும், நீக்குவதும் அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறது. எனவே அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. என்று இந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.
தள்ளுபடி செய்து உத்தரவு
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை மறு ஆய்வு செய்யும்படி, விழுப்புரம் மாவட்ட மக்கள் நல பணியாளர்கள் மறுவாழ்வு சங்க மாநில தலைவர் ஆர். தனராஜ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் இந்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டிய முகாந்திரம் எழவில்லை. எனவே இந்த மறு ஆய்வு மனுவானது தள்ளுபடி செய்யப்படுகிறது. மறு ஆய்வு மனு மீது வாதங்களை முன்வைக்கக் கோரும் மனுவும் நிராகரிக்கப்படுகிறது. என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications