"பொறுமை இழக்கிறோம்! ஒரு மணி நேரம்தான் டைம்.. சீக்கிரம் முடியுங்கள்!" ஹிஜாப் வழக்கில் சுப்ரீம் கோர்ட்
டெல்லி: கர்நாடகா கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சில முக்கிய கேள்விகளை எழுப்பினர்.
கர்நாடகாவில் உள்ள பியூ கல்லூரிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்று கல்வி நிறுவனங்கள் இந்தாண்டு தொடக்கத்தில் தடை விதித்தன. அதை எதிர்த்து அங்குக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன.
மேலும், கர்நாடகா உயர் நீதிமன்றத்திலும் ஹிஜாப் அணிய அனுமதி கேட்டு வழக்குகள் தொடரப்பட்டன. இருப்பினும், இந்த வழக்கில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவிகளின் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

ஹிஜாப்
இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அத்தியாவசியமானது இல்லை என்றும், கல்வி நிறுவனங்களில் சீருடை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறிய உயர் நீதிமன்றம் கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை என்று கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கர்நாடகா ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கடந்த சில நாட்களாகவே இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வாதங்கள்
அப்போது பல முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனிடையே தாங்கள் பொறுமையை இழந்து வருவதாகவும் ஹிஜாப் வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மறுப்பு வாதங்களை இன்று ஒரு மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். 9 நாட்களாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மனுதாரர்களின் வாதங்களை முடிக்க வழக்கறிஞர்களுக்கு இன்று ஒரு மணி நேரம் மட்டுமே அவகாசம் தருவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பொறுமை இழக்கிறோம்
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "உங்கள் அனைவருக்கும் நாங்கள் ஒரு மணி நேரம் அவகாசம் தருகிறோம். நீங்கள் உங்கள் வாதங்களை முடித்துக் கொள்ளுங்கள். இப்போது, ஓவர் டோஸ் விசாரணை" என்று நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மனுதாரர்களில் ஒருவரான மூத்த வழக்கறிஞர் ஹுசெபா அஹ்மதியிடம் கூறினார்.

நன்றி
ஏற்கனவே பல வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்துள்ளதாகவும் நாங்கள் பொறுமையை இழந்து வருகிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது வழக்கறிஞர் ஹுசெபா அஹ்மதி, "இத்தனை நாட்கள் பொறுமையாக வாதங்களைக் கேட்ட நீதிபதிகளுக்கு நன்றி" என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், "எங்களுக்கு வேறு வழியில்லையே" என்று பதில் அளித்தனர்.

அனுமதிக்க முடியாது
வழக்கு தொடர்பான வாதங்களை முடித்துக் கொள்ள இன்று வியாழக்கிழமை ஒரு மணி நேரம் அவகாசம் தருவதாகக் கூறிய பெஞ்ச், அதற்கு மேல் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர். இன்று வழக்கு 10ஆவது நாளாக விசாரணைக்கு வரும் நிலையில், இதில் பல முக்கிய வாதங்கள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகா
கர்நாடகாவில் உள்ள கல்லூரிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்று தடை விதித்தன. அதை எதிர்த்து அங்குக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பாகப் போராட்டங்கள் நடைபெற்றன. அதேபோல சில இந்து அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும் காவி துண்டை அணிந்து வந்ததால் அங்குப் பதற்றம் ஏற்பட்டது. அதன் பின்னர், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்ப சில வாரங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications