மணிப்பூர் வன்முறை.. "அரசியலமைப்பு தோல்வி அடைந்ததற்கான சாட்சி.." உச்ச நீதிமன்றம் காட்டம்
டெல்லி: மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பகீர் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இப்போது பீரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கே கடந்த சில மாதங்களாகவே குக்கி மற்றும் மைத்தேயி இன மக்கள் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

அங்கே குக்கி இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் நிலையில், மைத்தேயி மக்களும் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதைத் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.
மணிப்பூர்: இருப்பினும், மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மைத்தேயி இன மக்களைப் பழங்குடியினர் வகுப்பில் சேர்த்தால் தங்கள் உரிமை பாதிக்கப்படும் என்று குக்கி இன மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மிகக் கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஒட்டுமொத்த மணிப்பூர் மாநிலமும் பற்றி எரிந்து வரும் நிலையில், அங்கே இணையச் சேவையும் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது.
வன்முறை தொடரும் நிலையில், ராணுவம், போலீசார், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். சில காலத்திற்கு முன்பு மத்திய அமைச்சர் அமித் ஷா கூட மணிப்பூர் மாநிலத்திற்கு நேரடியாகச் சென்று நிலைமையைக் கண்காணித்தார். இருப்பினும், அங்கே வன்முறை குறையவே இல்லை. இரண்டு மாதங்களாக வன்முறை தொடர்ந்தே வருகிறது. இதனால் அங்கே ஒட்டுமொத்தமாக மாநிலமே முடங்கியுள்ளது.
பகீர் சம்பவம்: இதற்கிடையே நேற்று அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியானது. அதாவது மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்த 2 பழங்குடியின பெண்களை அங்குள்ள கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போதே அங்கிருந்த சில இளைஞர்கள் அவர்களிடம் அத்துமீறியுள்ளனர். இவை அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், அந்தப் பெண்கள் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த வீடியோ நேற்று வெளியாகி நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதில் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான கொடூரம் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் இருக்கும் இந்த வீடியோ அரசியலமைப்பின் ஒட்டுமொத்த தோல்வியைக் காட்டுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம்: இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்கே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் காட்டமான கருத்துகளைத் தெரிவித்தார்.. மேலும், இந்த வழக்கை ஜூலை 28ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

டி.ஒய்.சந்திரசூட் மேலும் கூறுகையில், "நேற்று இணையத்தில் பரவிய வீடியோக்களை பார்த்து மிகவும் கவலையடைந்துள்ளோம். அவை மிகவும் கவலையளிக்கிறது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது..
அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் எடுக்க நேரிடும்.. இதுபோன்ற வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். ஊடகங்கள் வீடியோக்களில் இருக்கும் காட்சிகள் ஒட்டுமொத்த அரசியலமைப்பும் தோல்வியடைந்ததைக் காட்டுகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications