பொன்முடி வழக்கு: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்- நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை!
டெல்லி: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாடு அமைச்சராக பதவி வகித்த திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ. பொன்முடிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி எம்.எல்.ஏ, அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி. மேலும் பொன்முடி வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே தமக்கும் மனைவி விசாலாட்சிக்கும் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இதனால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக அறிவிக்கப்பட்டார். அவரது தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அறிவிப்பும் வாபஸ் பெறப்பட்டது. அத்துடன் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமும் அனுப்பினார். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியோ, பொன்முடி மீது ஊழல் கறை படிந்துள்ளது; அவருக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என மறுத்தார். அத்துடன் பொன்முடிக்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதே தவிர ரத்து செய்யவில்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு தமது கருத்தை முன்வைத்தது.
இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டப் போராட்டத்தை தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக கருதி இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.
இன்றைய விசாரணையின் போது ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள்:
- பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த பின்னர் நீதிமன்ற உத்தரவை மதித்து பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுப்பது ஏன்?
- நீதிமன்ற உத்தரவை மீறி எப்படி ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என கூற முடியும்?
- (மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலை நோக்கி) உங்கள் ஆளுநர் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்?
- ஆளுநர் ரவி மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்
- ஏற்கனவே 10 மசோதாக்களை சட்டசபை நிறைவேற்றிய பின்னர் ஜன்பாதிபதிக்கு ஏன் அனுப்பி வைத்தார்?
- ஆளுநர் ரவிக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா?
- தாம் என்ன செய்கிறோம் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தெரியாதா?
இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications