Bihar SIR: "விதிகளை மீறினால்.. தேர்தல் ஆணையத்தின் சார் நடவடிக்கையை ரத்து செய்வோம்.." உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
டெல்லி: பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குச் சார் எனப்படும் சிறப்புத் தீவிரத் திருத்தத்தைத் தேர்தல் ஆணையம் நடத்தியிருந்தது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும் வழக்கு தொடர்ந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் விதிகளை மீறியது கண்டறியப்பட்டால் சார் நடவடிக்கையை ரத்து செய்வோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஒரு பக்கம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மற்றொரு பக்கம் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையும் பேசுபொருளானது. அதாவது தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில் அங்குத் தேர்தல் ஆணையம், சார் எனப்படும் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்வதாகக் கடந்த ஜூன் 24ம் தேதி அறிவித்தது.

பீகார் சார்
தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில் இந்த நடவடிக்கை ஏன் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். ஆளும் தரப்பின் தோல்வியைத் தடுக்கவே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இதில் வாக்காளர்கள் பெரியளவில் நீக்கப்படுவார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் சாடினர். மேலும், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்றம் பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தது. குறிப்பாக வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்கத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஆட்சேபனைகளைத் தெரிவிக்கச் செப்டம்பர் 1ம் தேதியைக் காலக்கெடுவாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், அதையும் நீடிக்கச் சொன்னது உச்ச நீதிமன்றம்.
ஆதார்
பொதுமக்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் எனச் சொல்லித் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த பட்டியலில் ஆதார் இல்லாமல் இருந்தது. அனைத்து தரப்பு மக்களிடமும் இருக்கும் ஆதார் இல்லாதது சரியான நடவடிக்கை இல்லை எதிர்க்கட்சிகள் வாதத்தை முன்வைத்திருந்தது. அதை ஏற்ற உச்ச நீதிமன்றம், விடுபட்டவர்களைச் சரி பார்க்க 12வது ஆவணமாக ஆதாரை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்தது.
இந்தச் சூழலில் தான் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணை வந்தது.
ஆவணங்கள்
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சிங்வி, "ஆதார் அட்டை பொதுமக்களிடம் பரவலாக இருக்கிறது. ஆனால், அது ஏற்கத்தக்க ஆவணங்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆனால், இந்திய மக்கள்தொகையில் 1%-க்கும் குறைவானவர்களிடம் மட்டுமே உள்ள பாஸ்போர்ட் ஏற்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் சொன்ன பெரும்பாலான ஆவணங்கள் 2-3% மக்களிடம் மட்டுமே இருக்கிறது. தேர்தல் நடைமுறையில் இருந்து பொதுமக்களை விலக்கி வைக்கவே இதுபோல செய்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் அறிவித்த ஆவணங்களில் மூன்று ஆவணங்கள் நில உரிமை தொடர்பானவை.. நிலம் இல்லாதவர்களுக்கு இது பொருந்தாது. பீகாரில் வசிப்பிடச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை. இப்படி எளிய மக்களிடம் இல்லாத பல ஆவணங்களைத் தேர்தல் ஆணையம் ஆவண பட்டியலில் கூறியிருக்கிறது. மேலும், இவ்வளவு குறுகிய காலத்தில் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை (SIR) மேற்கொள்வதற்கான கட்டாயத் தேவை என்ன?" என கேள்வி எழுப்பினார்.
மேற்கு வங்கம்
அடுத்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தனது வாதத்தைத் தொடர்ந்து. மேற்கு வங்க மாநிலத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் சார் நடவடிக்கை குறித்த அறிவிப்பு வந்ததாக அவர் குறிப்பிட்டார். மாநில அரசிடம் எந்தவொரு கலந்தாலோசனையும் செய்யாமல் தேர்தல் ஆணையம் SIR நடவடிக்கை குறித்து நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரசாந்த் பூஷண்
தொடர்ந்து ஆஜரான பிரசாந்த் பூஷணும் தேர்தல் ஆணையத்தின் மீது ஐந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சார் நடவடிக்கையில் தேர்தல் ஆணையத்தின் அவசரம், ஆதார்/ வாக்காளர் அட்டையை ஏற்க மறுப்பது, நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வெளியிட மறுப்பது, நீக்கப்பட்டதற்கான காரணங்களை வெளியிட மறுப்பது, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்களைத் தேடும் வழிமுறையை நீக்கியது ஆகிய தேர்தல் ஆணையத்தின் 5 நடவடிக்கைகள் மீது சந்தேகம் எழுப்பினார்.
பிரசாந்த் பூஷன் மேலும் கூறுகையில், "ராகுல் காந்தி வாக்கு திருட்டு தொடர்பாகப் பேசும் வரை தேடக்கூடிய வாக்காளர் பட்டியல் இருந்தது. ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உடனேயே தேடக்கூடிய வகையிலிருந்த வாக்காளர் பட்டியல் நீக்கப்பட்டது" என்றார்.
ரத்து செய்வோம்
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் சட்டவிரோத முறைகள் கையாளப்பட்டு இருந்தால் ஒட்டுமொத்த சார் நடவடிக்கையும் ரத்து செய்யப்படும். தேர்தல் ஆணையம் ஒரு அரசியலமைப்பு அமைப்பு.. எனவே, சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் சட்டப்பூர்வமாகவும் மற்றும் உரிய விதிகளைப் பின்பற்றியும்தான் மேற்கொள்ளும் என நம்புகிறோம்" என்றனர். மேலும், இந்த விவகாரத்தில் வழங்கப்படும் இறுதித் தீர்ப்பு என்பது நாடு தழுவிய அளவில் அனைத்து சார் நடவடிக்கைகளும் பொருந்தும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications