ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிவாளம் போடுமா உச்சநீதிமன்றம்? தமிழ்நாடு அரசு வழக்கில் நாளை விசாரணை
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி நடைபெறுகிறது. இம்மாநில ஆளுநராக இருப்பவர் பன்வாரிலால் புரோஹித். தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்த காலத்தில் சர்ச்சைகளில் சிக்கியவர் பன்வாரிலால் புரோஹித்.

பஞ்சாப் வழக்கு என்ன?: பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்கிறார் பன்வாரிலால் புரோஹித். மாநில சட்டசபையை கூட்டுவதற்கும் முட்டுக்கட்டையாக இருந்தார். இதனையடுத்தே உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு வழக்கு தொடர்ந்தது.
பஞ்சாப் வழக்கில் வெளுத்த உச்சநீதிமன்றம்: இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநர்கள் என்பவர்கள் ஆட்சியாளர்கள் அல்ல என குட்டு வைத்தது. மேலும் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் என உச்சநீதிமன்றத்துக்கு மாநில அரசுகள் வரும் நிலையை ஆளுநர்கள் உருவாக்கி இருப்பது கவலைக்குரியது. மாநில அரசின் மசோதாக்களை ஆளுநர்கள் ஆய்வு செய்யலாம். ஆனால் உச்சநீதிமன்றத்துக்கு வரும் முன்னரே ஒப்புதல் தந்திருக்க வேண்டும் எனவும் வெளுத்துவிட்டனர் நீதிபதிகள்.
தெலுங்கானா, கேரளா: இதற்கு முன்னர் தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் அரசு, மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியிருந்தது. தற்போது தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வழக்குகளை அடுத்தடுத்து தாக்கல் செய்தது. தமிழ்நாட்டை பின்பற்றி கேரளாவும் அம்மாநில ஆளுநர் ஆரிப்கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தமிழ்நாடு, கேரளா வழக்குகள்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மொத்தம் 14 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ளார். கேரளா ஆளுநர் ஆரிப் முகமதுகான் மொத்தம் 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இந்த வழக்குகள் அனைத்தையுமே உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
தமிழ்நாடு அரசு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மொத்தம் 198 பக்க மனுவைத் தாக்கல் செய்தது. இந்த வழக்கின் சாராம்சம் என்பது, தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்கள், அரசு உத்தரவுகளை பரிசீலிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும்; அத்துடன் அரசு நியமித்த தேர்வுக்குழுக்களின் பரிந்துரைகளின்படி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரகளை நியமிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்பதுதான். இந்த இரண்டின் அடிப்படையில்தான் தமிழ்நாடு அரசு நாளை வாதிட இருக்கிறது. பஞ்சாப் மாநில அரசு வழக்கில் குட்டு வைத்தது போல தமிழ்நாடு அரசு வழக்கில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிவாளம் போடுமா உச்சநீதிமன்றம்? என்பது நாளை தெரிய வரும்.












Click it and Unblock the Notifications