கோத்ரா வன்முறை- முக்கிய அரசியல் தலைவருக்கு எதிராக டீஸ்டா சதி- உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு
டெல்லி: குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடத்தபட்ட மதவன்முறைகளின் போது முக்கிய அரசியல் தலைவருக்கு எதிராக சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் சதி செய்தார் என உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் டீஸ்டா செதல்வாட் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மதகலவரம் வெடித்தது. இந்த மதவன்முறையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலக நாடுகளை உலுக்கியது குஜராத் மத வன்முறைகள்.
2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளின் போது முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. குஜராத் வன்முறைகளின் போது காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் மோடி உட்பட 64 பேர் மீது குற்றமும் சாட்டப்பட்டது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு, மோடி உள்ளிட்டோரை விடுதலை செய்தது. சிறப்பு புலனாய்வுக் குழுவானது மோடி உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்த்து ஈசான் ஜாப்ரி மனைவி ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினர். இது தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்த உச்சநீதிமன்றம், மோடி உள்ளிட்டோரை சிறப்பு புலனாய்வுக் குழு விடுதலை செய்ததை கடந்த ஜூன் 24-ந் தேதி உறுதி செய்தது.
அதேநேரத்தில் 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறை வழக்குகளில் மோடியை தொடர்புபடுத்தி சிக்க வைக்க சதித் திட்டம் தீட்டியதாக டீஸ்டா செதல்வாட்டை அதிரடியாக கைது செய்தது சிறப்பு புலனாய்வுக் குழு. டீஸ்டாவுடன் முன்னாள் டிஜிபி ஶ்ரீகுமார், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரும் கடந்த ஜூன் 25-ந் தேதி கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது.
இவ்வழக்குகளில் தங்களுக்கு ஜாமீன் கோரி டீஸ்டா, ஶ்ரீகுமார் தாக்கல் செய்த மனுவை அகமதாபாத் நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து டீஸ்டா செதல்வாட், ஶ்ரீகுமார் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 25-ந் தேதிக்குள் குஜராத் அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று டீஸ்டா, ஶ்ரீகுமார் ஜாமீன் மனு மீது மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது 2 நாட்களில் குஜராத் அரசின் பதில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனடிப்படையில் குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில் குஜராத் வன்முறைகளின் போது, முக்கிய தலைவர் ஒருவருக்கு எதிராக டீஸ்டா சதித் திட்டம் தீட்டினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அரசியல் தலைவர் ஒருவரை சந்தித்தார்; பெரும் தொகை பணம் பெற்றார் என்றும் குஜராத் அரசு கூறியுள்ளார். இன்று டீஸ்டா செதல்வாட் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications