‛‛நீட் தேர்வின் புனித தன்மை கெட்டுவிட்டது’’.. தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: வினாத்தாள் கசிந்ததாக கூறி‛நீட்’ தேர்வை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இத்தகைய குற்றச்சாட்டில் நீட் தேர்வின் புனித தன்மை கெட்டுவிட்டது. இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி தேசிய தேர்வு முகமைக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியது.
நம் நாட்டில் பொது மருத்துவம், பல்மருத்துவம் பயில நீட் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடக்கம் முதலே எதிர்ப்பு உள்ளது.

அதேபோல் தற்போது பல மாநிலங்களில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த எதிர்ப்புக்கு முக்கிய காரணம் கடந்த மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வாகும். அந்த நீட் தேர்வின்போது முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுவதே தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் எதிர்ப்புக்கு காரணமாகும்.
அதாவது கடந்த மே மாதம் 5ம் தேதி 557 நகரங்களில் தேர்வு மையங்களில் 13 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது. இன்று மதியம் பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்கி மாலை 5.20 மணிக்கு முடிவடைந்தது. நாடு முழுவதும் 24 லட்சம் பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகி உள்ளது. இதில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் தான் நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாகவும், நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் முன்கூட்டியே கசிந்த வினாத்தாளை பயன்படுத்தி தேர்வு எழுதியோருக்கு மருத்துவ சீட் கிடைத்துவிடும். நேர்மையாக படித்த தங்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும் எனவும் கூறினர்.
அதோடு நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் இன்னும் தேசிய தேர்வு முகமை சரியான பதிலளிக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதில் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீது இன்று நீதிபதிகள் விக்ரம் நாத், அசானுதீன் அமானுல்லா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‛‛நீட் தேர்வு தொடர்பான முறைகேடு புகார்களால் நீட் தேர்வின் புனித தன்மை கெட்டுப்போய்விட்டது. இதற்கு விடை தேவைப்படுகிறது. இதனால் மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் விளக்கம் அளிக்க வேண்டும்’’ எனக்கூறினர். மேலும் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கு விசாரணை ஜுலை 8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்த விசாரணை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications