வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை செல்லும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி: வங்கதேசத்தில் இருந்து அசாமிற்கு குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் 4:1 என்ற அடிப்படையில் அதாவது, ஒரு நீதிபதி மட்டும் செல்லாது என தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் 1971 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்திற்குள் வங்கதேசத்தில் இருந்தது சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு அசாம் குடியுரிமை வழங்க வகை செய்யும் வகையில் குடியுரிமை சட்டத்தில் அசாம் ஒப்பந்த பிரிவு 6 ஏ இணைக்கப்பட்டது.

இதன் மூலம் இந்த கால கட்டத்தில் அசாமில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும். ஆனால் இப்படி குடியுரிமை பெற்றவர்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு இந்திய தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை இல்லை என்ற விதியும் சேர்க்கப்பட்டு இருந்தது. குடியுரிமை சட்டத்தின் 6A பிரிவால் அஸ்ஸாமின் பூர்வகுடி மக்கள் சிறுபான்மையினராக்கப்படுவதாகவும், கலாசாரம் பாதிக்கப்படுவதால் 6A பிரிவு செல்லாது என அறிவிக்க கோரியும் கடந்த 2012 ஆம் அண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதாவது, இந்திய குடிமக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் அடிப்படை உரிமைகளை இந்த 6A மீறுவதாகவும், மறுப்பதாகவும், அரசியல் சாசனத்தின் 325, 326-ன் கீழ் அஸ்ஸாம் மக்களின் அரசியல் உரிமையையும் மறுக்கிறது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் 6A பிரிவுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், எம்எம் சுந்தரேஷ், பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, நீதிபதி பர்திவாலா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், குடியுரிமை சட்டத்தின் பிரிவு 6 ஏ செல்லும் என்று தீர்ப்பளித்தது. 4 நீதிபதிகள் ஒருமித்தமாக தீர்ப்பளித்தனர். நீதிபதி பர்திவாலா மட்டும் மாறுபட்ட தீர்ப்பளித்தார். குடியுரிமை சட்டப்பிரிவு 6 ஏ அரசியல் அமைப்புக்கு எதிராக உள்ளதாக நீதிபதி பர்திவாலா தீர்ப்பளித்தார். எனினும், பெரும்பான்மை அடிப்படையில் குடியுரிமை சட்டத்தின் 6A பிரிவு செல்லும் என்ற உத்தரவே அமலாகும். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம், அசாமில் 1966-ம் ஆண்டு முதல் 1971 வரை குடியேறியவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications