Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்கள் சிவந்த சுப்ரீம் கோர்ட்! "இதை சும்மா விட மாட்டோம்.." மத்திய அரசு மீது காட்டம்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: என்சிஆர்டி பாடப்புத்தகத்தில் நீதித்துறை ஊழல் என்ற பாடத்தில் இடம்பெற்றிருந்த பாடங்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது பெரிய விவகாரமாக வெடித்த நிலையில், அந்தப் புத்தகம் வாபஸ் பெறப்பட்டது. இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன.. இதன் பின்னணி குறித்த விவரங்களை நாம் தெளிவாகப் பார்க்கலாம்!

என்சிஆர்டி எனப்படும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) வெளியிட்ட புதிய சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், 'நீதித்துறையில் ஊழல்' குறித்த ஒரு சிறு பகுதி மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதனால் கொதிப்படைந்த உச்ச நீதிமன்றம், இந்தப் பாடங்களுக்குத் தடை விதித்ததோடு மட்டுமல்லாமல், புதிய தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 8ஆம் வகுப்புக்கான இந்தப் புத்தகத்தின் வெளியீடு மற்றும் விநியோகத்திற்கும் முழுத் தடை விதித்துள்ளது.

Supreme court vs Central govt

கோபத்திற்கு என்ன காரணம்?

ஆனால், இந்தக் கோபத்திற்கு என்ன காரணம்? நீதித்துறையை ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் வழக்குகளின் தேக்கத்தால் பல்வேறு சவால்கள் ஏற்படுவதாக என்சிஇஆர்டி புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது உச்ச நீதிமன்றத்தைச் சீற்றமடையச் செய்தது. இதை 'ஆழமாக வேரூன்றிய சதி' என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

என்சிஇஆர்டி உடனடியாக நடவடிக்கை எடுத்து, புதிதாக வெளியிடப்பட்ட பாடப்புத்தகத்தைத் திரும்பப் பெற்றதுடன், அதன் விற்பனையையும் நிறுத்தியது. எனினும், உச்ச நீதிமன்றம் இதைவிட வேகமாகச் செயல்பட்டு, தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. அத்துடன், கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்விச் செயலர் மற்றும் என்சிஇஆர்டி இயக்குநருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீதித்துறை பங்கு

பிப்ரவரி 24ம் தேதி வெளியிடப்பட்ட 8ஆம் வகுப்பு என்சிஇஆர்டி சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள 'நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு' என்ற அத்தியாயம் உள்ளது. இது, ஊழல், அதிகப்படியான வழக்குகளின் தேக்கம் மற்றும் நீதிபதிகளின் பற்றாக்குறை ஆகியவை பற்றிக் கூறப்பட்டு இருந்தது.

இந்த விவகாரம் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மூலம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் உடனடியாகத் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, "நிறுவனத்தை இழிவுபடுத்த" யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். 2016 மற்றும் 2025க்கு இடையில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகத் தலைமை நீதிபதி அலுவலகம் சுமார் 7,500 புகார்களைப் பெற்றதாகச் சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்த நிலையில், இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.

வாபஸ்

உச்ச நீதிமன்றத்தின் இந்த கடுமையான கருத்துக்களைத் தொடர்ந்து, என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தைத் திரும்பப் பெற்றதுடன், அச்சிடப்பட்ட 2.25 லட்சம் பிரதிகளில் விற்கப்பட்ட 38 பிரதிகளையும் வாபஸ் பெறத் தொடங்கியது. பின்னர், என்சிஇஆர்டி ஒரு மன்னிப்புக் கடிதத்தை வெளியிட்டது. அதில் பிழை தற்செயலானது என்றும், அந்தப் பகுதி மீண்டும் மாற்றி அமைக்கப்படும் எனக் கூறப்பட்டது.

இந்தச் சூழலில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு மற்றும் என்சிஇஆர்டி அமைப்பை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. அனைத்து அச்சுப் பிரதிகளையும் பறிமுதல் செய்யுமாறும், புத்தகத்தின் வெளியீட்டிற்கும் டிஜிட்டல் வெர்ஷனுக்கும் முழு தடை விதிக்குமாறும் உத்தரவிட்டது. அனைத்துப் பிரதிகளும் அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார். இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது..

நடவடிக்கை

ஆனால், இந்த விவகாரம் இத்துடன் முடிந்துவிடவில்லை. நீதித்துறை பற்றிய அத்தியாயத்தை எழுதிய தேசிய பாடத்திட்ட வாரிய உறுப்பினர்கள் பற்றிய விவரங்களையும் நீதிமன்றம் கோரியது. அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்படலாம் என்றும் தெரிகிறது.. நீதிபதிகள் மேலும், "நாங்கள் ஒரு விரிவான விசாரணையை விரும்புகிறோம். இதற்கு யார் காரணம்.. யார் பொறுப்பு என்பதைக் கண்டறிய வேண்டும்... அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! இந்த வழக்கை நாங்கள் முடிக்க மாட்டோம்" என்றனர்.

பள்ளிக் கல்வித் துறை மற்றும் என்சிஇஆர்டி இயக்குநர் டாக்டர் தினேஷ் பிரசாத் சக்லானி ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேநேரம் நீதித்துறை மீதான சட்டப்பூர்வமான விமர்சனத்தை நசுக்குவதற்காக இந்த உத்தரவுகள் இல்லை என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. என்சிஇஆர்டியின் விளக்கத்திற்குப் பதிலளித்த நீதிமன்றம், புத்தகத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் தெரியாமல் நடந்தது போல் தோன்றவில்லை என்று கூறியது.

காட்டம்

நீதிபதிகள் மேலும், "நீதித்துறை அதிகாரத்தைக் குறை மதிப்பிற்கு உட்படுத்தவும், நீதித்துறையின் கண்ணியத்தை இழிவுபடுத்தவும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை இது என்று எங்களுக்குத் தோன்றுகிறது" என்றனர். மத்திய அரசின் சார்பில் ஆஜரான சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார். குறிப்பிட்ட பாடத்தைத் தயாரித்த இரண்டு அதிகாரிகளும் இனி யுஜிசி அல்லது எந்த அமைச்சகத்துடனும் பணியாற்ற மாட்டார்கள் என்று நீதிமன்றத்திற்கு உறுதி அளித்தார்.

இதற்கிடையில், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இந்த நடவடிக்கை வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார். இந்த வழக்கு நான்கு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+